Enable Javscript for better performance
என்.ஐ.ஏ. சட்டத் திருத்தம்: நாடாளுமன்ற தேர்வுக்குழு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும்: வைகோ- Dinamani

சுடச்சுட

    

    என்.ஐ.ஏ. சட்டத் திருத்தம்: நாடாளுமன்ற தேர்வுக்குழு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும்: வைகோ

    By DIN  |   Published on : 25th July 2019 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vaiko1


    என்.ஐ.ஏ. சட்டத் திருத்தம், தகவல் அறியும் உரிமைச் சட்டத் திருத்தம் ஆகியவற்றை நாடாளுமன்றத் தேர்வுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
    இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
    மக்களவையில் நிறைவேற்றப்பட்ட தேசியப் புலனாய்வு முகமைச் சட்டத் திருத்தம், மத்திய அரசுக்கு தீவிரவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துதல் என்ற பெயரில் ஏதேச்சதிகாரத்துக்கு வழி வகுத்துள்ளது கண்டனத்துக்கு உரியது.
    என்.ஐ.ஏ. சட்டத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட குற்றங்களுக்கானப் பட்டியலில் ஆள்கடத்தல், தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் உற்பத்தி அல்லது விற்பனை செய்தல், வெடி பொருள்கள் சட்டம் 1908-இன் கீழ் வரும் குற்றங்கள், கள்ள நோட்டு அச்சிடுதல் ஆகியன சேர்க்கப்பட்டுள்ளன. இனி தேசியப் புலனாய்வு முகமைதான் இந்த குற்றச் செயல்களைப் பற்றி விசாரணை செய்யவோ, நடவடிக்கை எடுக்கவோ முடியும். மேற்கண்ட குற்றங்களைத் தடுக்க மாநில அரசுகளுக்கு உள்ள சட்ட அதிகாரங்களைப் பறித்துவிட்டு, மாநில காவல்துறை தலைவருக்குக்கூட தகவல் கொடுக்காமல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மாநில அதிகாரங்கள் பறிக்கப்பட்டிருப்பது மட்டுமல்ல, சட்டம் - ஒழுங்குப் பராமரிப்பும்கூட இனி என்.ஐ.ஏ. கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படும்.
    அதோடு, இந்திய ஜனநாயக அமைப்பில் குடிமக்களுக்கு அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை கேள்வி கேட்கவும், சீரிய முறையில் இயங்கிடச் செய்யவும் வாய்ப்பு அளித்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மத்திய அரசு நீர்த்துப்போகச் செய்திருப்பதும், கேள்வி கேட்பாரின்றி சர்வாதிகார ஆட்சி நடத்த முயற்சிப்பதும் கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.
    எனவே, கூட்டாட்சிக் கோட்பாடுகளுக்கு ஊறு விளைவிக்கும் என்.ஐ.ஏ. சட்டத் திருத்தம், தகவல் அறியும் உரிமைச் சட்டத் திருத்தம் ஆகியவற்றை நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai