Enable Javscript for better performance
டி.ராஜா, மைத்ரேயன் உள்பட தமிழக எம்.பி.க்கள் ஐந்து பேருக்கு மாநிலங்களவையில் பிரிவுபசாரம்- Dinamani

சுடச்சுட

    

    டி.ராஜா, மைத்ரேயன் உள்பட தமிழக எம்.பி.க்கள் ஐந்து பேருக்கு மாநிலங்களவையில் பிரிவுபசாரம்

    By DIN  |   Published on : 25th July 2019 02:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    raja


    மாநிலங்களவை எம்.பி. பதவிக் காலம் முடியும் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா, அதிமுக உறுப்பினர் வா.மைத்ரேயன் உள்ளிட்ட ஐந்து பேருக்கு பிரிவுபசார நிகழ்வு மாநிலங்களவையில் புதன்கிழமை நடைபெற்றது. 
    தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர்கள் வா.மைத்ரேயன், கே.ஆர். அர்ஜுனன், ஆர்.லட்சுமணன், டி.ரத்தினவேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா ஆகியோர் புதன்கிழமையுடன் பதவியில் இருந்து ஓய்வு பெற்றனர். இதையடுத்து, மாநிலங்களவையில் இத்தகவலை அவைத் தலைவர் எம். வெங்கய்ய நாயுடு உறுப்பினர்களுக்குத் தெரிவித்து பேசுகையில், ஓய்வுபெறும் உறுப்பினர்கள் அவையின் விவாதங்களிலும், நாடாளுமன்ற குழுக்கள் மற்றும் நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தை புரிந்து கொண்டு வளர்க்கும் நடைமுறையிலும் முக்கியத்துவமிக்க பங்களிப்பை அளித்திருக்கின்றனர். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களிலும், தமிழகம் சார்ந்த விவகாரங்களிலும் சிறந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டனர். அதை இந்த அவை நிச்சயம் தவற விடும் என்றார். 
    உறுப்பினர்கள் பாராட்டு: 
    அவையின் பாஜக குழுத் தலைவர் தாவர்சந்த் கெலாட் பேசுகையில், தங்களது எம்.பி. பதவிக்காலத்தை முடித்தாலும் நாட்டு மக்களுக்காக பணியைத் தொடர்வார்கள். அவர்கள் வாழ்வில் நலம் பெற வாழ்த்துகிறேன். தேச சேவைக்காக தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர் என்றார். 
    மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆஸாத் பேசுகையில், இந்த அவைக்கு அவர்கள் மீண்டும் வருவார்கள் என நம்புகிறேன். ஆன்காலஜி பிரிவில் சிறப்பு மருத்துவ நிபுணராக இருந்த போதிலும்  வா.மைத்ரேயன் மக்கள் பணியாற்ற அரசியல் துறையைத் தேர்ந்தெடுத்துள்ளார். அவரைப் பாராட்டுகிறேன். அதேபோன்று, டி.ராஜாவும் அவை நடவடிக்கைகளில் மிகுந்த பங்களிப்பை அளித்துள்ளார். அவையின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் நிலையிலும், எனக்கு குறைவாகவே பேச வாய்ப்புக் கிடைக்கிறது. டி.ராஜா மட்டும்தான் ஒரே நாளில் ஒவ்வொன்றின் மீதும் 4 - 5 உரைகளைக் கொடுத்து விடுகிறார் என்று புகழாரம் சூட்டினார். இந்நிகழ்வில் அதிமுக குழுத் தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன், திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா உள்ளிட்டோரும் பாராட்டி பேசினர்.
    டி.ராஜா: நமது அரசியலமைப்பில் உச்ச அமைப்பாக நாடாளுமன்றத்தைக் கருதுகிறோம். அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் மற்றும் டாக்டர் அம்பேத்கர் ஆகியோர் மனக்கண் தோன்றியது போல, நமது நாடாளுமன்றம் தொடர்ந்து இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். இந்த அவையில் இருந்து நான் தற்காலிகமாக ஓய்வு பெறலாம். ஆனால் நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் பணியாற்றிக் கொண்டிருப்பேன். சமூக நீதி மற்றும் அனைத்து மக்களின் சமத்துவத்துக்காக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.  ஜாதி, இனம் அல்லது பொருளாதார அந்தஸ்து அடிப்படையில் மக்களிடம் பாகுபாடு காட்டக் கூடாது. மக்கள் ஏன் சமூக ரீதியில் சுரண்டப்பட  வேண்டும் என சுட்டிக் காட்டுவதில் வேதனையுறுகிறேன்.  மக்களை மனிதர்கள் போல நடத்துவதையும், அவர்களின் அரசியலமைப்பு, ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துவதையும் இந்த நாடாளுமன்றம் உறுதிப்படுத்த வேண்டும். 
    ஒரு நபர், ஒரு வாக்கு என்ற நிலையில்,  ஒரு நபர் ஒரு மதிப்பீடு என்ற நோக்கம் உறுதிப்படுத்தப்பட  வேண்டும். இந்தியா அதன் அடிப்படை  மதிப்பீடுகளில் உறுதியாக இருந்தால்,  இந்தியா ஒரு அரசியல் பங்களிப்பை அளிக்க முடியும்  என்றார்.
    கே.ஆர். அர்ஜுனன்:  எனது நாடாளுமன்ற உள்ளூர் பகுதி வளர்ச்சி நிதியை மக்களின் நலனுக்காக செலவிட்டதற்காக மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.
    ஆர். லட்சுமணன்: நான் இங்கு வெறும் கையுடன் வந்தேன். வெறும் கையுடன் போகிறேன். ஆனால், இங்கிருந்துதான் செறிந்த அனுபவத்தைக் கற்றுக் கொண்டேன். எனது பதவியின் ஆறு ஆண்டுகள், ஆறு மாதங்கள் போல ஓடிவிட்டது. அடுத்த 60 ஆண்டுகளுக்கான பாடத்தைக் கற்றுக் கொண்டேன் என்றார்.
    டி.ரத்னவேல்: பாடப் புத்தகங்களிலும், பணத் தாள்களிலும் பார்த்த நாடாளுமன்றத்தை, அதன் படிக்கட்டுகளில் ஏறி உரையாற்றிடும் வாய்ப்பை எனக்கு அளித்த தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவை நினைத்துப் பார்க்கிறேன்.  வரலாற்றுச் சிறப்புமிக்கது இந்த அவை. 
    அறிஞர்கள், மேதைகள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள், இலக்கியவாதிகள் என பல மாமனிதர்கள் பங்கேற்ற இந்த அவையில் பங்கேற்று பணியாற்றியது குறித்து பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.  
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai