Enable Javscript for better performance
தகவல் அறியும் சட்டத்தின் அடிப்படையே தகர்ப்பு: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    தகவல் அறியும் சட்டத்தின் அடிப்படையே தகர்ப்பு: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

    By DIN  |   Published on : 25th July 2019 01:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ALAGIRI


    தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையையே மத்திய பாஜக அரசு தகர்த்துவிட்டது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
    இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
    முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி கடந்த 2004-இல் அமைந்தவுடன் எடுத்த மிகப் புரட்சிகரமான நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படுவது, தகவல் அறியும் உரிமைச் சட்டம். இந்தச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் ஆட்சி நிர்வாகத்தில் ஒளிவுமறைவை ஒழித்து வெளிப்படைத்தன்மை உருவாக்கப்பட்டது. 
    இதை இன்றைய மத்திய ஆட்சியாளர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட மத்திய தகவல் ஆணையத்தில் பல்வேறு பதவிகள் நிரப்பப்படாமல் முடக்கும் பணியை பாஜக அரசு செய்து வந்தது. 
    கடந்த 2018-இல் நாடாளுமன்றத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைத் திருத்தும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போது எழுந்த கடுமையான எதிர்ப்பு காரணமாக அந்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டது. 
    தற்போது பாஜகவுக்கு உள்ள அசுர பலத்தினால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவுகள் 13, 16 மற்றும் 27-இல் திருத்தங்கள் கொண்டு வந்து மக்களவையில் நிறைவேற்றப்பட்டு விட்டது.  இந்த திருத்தத்தின் மூலம் முதன்மை தகவல் ஆணையர், மாநிலங்களில் தகவல் ஆணையர்களின் பதவிக்காலம், ஊதியம் ஆகியவற்றை தீர்மானிக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது.  இந்தத் திருத்தத்தின் மூலம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படை தகர்க்கப்பட்டுள்ளது.
    முதன்மை தகவல் ஆணையர்களாகவும், தகவல் அதிகாரிகளாகவும் நியமிக்கப்படப் போகிறவர்களின் பதவிக்காலம், ஊதியம் ஆகியவற்றை மத்திய அரசே நிர்ணயிக்க இச்சட்டம் வழிவகுத்திருப்பதால், இனி தாங்கள் பதவியில் நீடிக்க வேண்டும் என்றால் எப்படி செயல்பட வேண்டும்; ஆளும் ஆட்சியாளர்களுக்கு கோபம் உண்டாக்கும் வகையில் செயல்பட்டால் என்ன விளைவுகளைச் சந்திக்க நேரிடும், என்பதையெல்லாம் நியமிக்கப்படுபவர்களுக்கு இச்சட்டத் திருத்தம் உணர்த்துகிறது. இந்தத் திருத்தத்தை மாநிலங்களவையில் நிறைவேற்றுவதற்கான முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டிருக்கிறது. இதைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai