Enable Javscript for better performance
தொண்டை அடைப்பான் நோய்: தமிழகத்தில் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி- Dinamani

சுடச்சுட

    

    தொண்டை அடைப்பான் நோய்: தமிழகத்தில் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

    By DIN  |   Published on : 25th July 2019 02:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    தொண்டை அடைப்பான் நோய் தாக்கம் ஏற்படாமல் இருக்க, தமிழகத்தில் இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    டிப்தீரியா எனப்படும் தொண்டை அடைப்பான் நோயானது, பெரும்பாலும் 15 வயதுக்குள்பட்ட சிறார்களைத் தாக்கக் கூடியதாகும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது பாக்டீரியா தொற்று மூலம் அந்தப் பாதிப்பு ஏற்படும். அதற்கு உரிய சிகிச்சைகளும், தடுப்பு மருந்துகளும் எடுத்துக் கொள்ளாத பட்சத்தில் உயிரிழப்புகூட நேரிட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
    தொண்டை வலி, தொடர் இருமல், கழுத்துப் பகுதி வீக்கம், சுவாச அடைப்பு ஆகியவை அதன் அறிகுறிகளாகும். கேரளத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தொண்டை அடைப்பான் நோய் தீவிரமாக இருந்தது. அதேபோன்று வட மாநிலங்களிலும் அதன் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில், தமிழகத்தில் சென்னை, ஈரோடு மாவட்டங்களில் அந்நோய் பாதிப்பு இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் 10-க்கும் மேற்பட்டோர் அந்நோய் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிகிறது.
    கடந்த சில நாள்களுக்கு முன்பாக சத்தியமங்கலம், தாளவாடியில் இரு சிறாருக்கு  தொண்டை அடைப்பான் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாநிலம் முழுவதும் அந்நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 20-க்கும் மேற்பட்ட மருத்துவக் குழுக்கள் அதற்காக அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
    இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறியதாவது:
    குழந்தை பிறந்ததில் இருந்து 15 வயது வரை அரசு அட்டவணையில் உள்ள அனைத்து தடுப்பூசிகளையும் போட வேண்டியது அவசியம். ஆனால், குறிப்பிட்ட வயதை குழந்தைகள் கடந்த பிறகு தடுப்பூசிகள் போடுவதை பல பெற்றோர்கள் தவிர்த்து விடுகின்றனர். இதன் காரணமாகவே நோய் எதிர்ப்புத் திறன் குறைந்து தொண்டை அடைப்பான் போன்ற நோய்கள் சிறார்களைத் தாக்குகின்றன.
    தமிழகத்தைப் பொருத்தவரை, தொண்டை அடைப்பான் நோய் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அதற்கான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. அரசு அறிவுறுத்தியபடி உரிய காலத்தில் அனைத்து தடுப்பூசிகளையும் குழந்தைகளுக்கு போட்டுக் கொண்டாலே போதுமானது என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai