Enable Javscript for better performance
நவமலை குடியிருப்புகளில் தொடர்ச்சியாக யானை தாக்குதல்- Dinamani

சுடச்சுட

    
    navamalai

    நவமலை  பகுதியில்  காட்டு  யானையால் சேதப்படுத்தப்பட்ட குடியிருப்பு.


    பொள்ளாச்சி வனச் சரகம், நவமலை பகுதியில் மலைவாழ் மக்கள் குடியிருப்புகளை காட்டு யானை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது. 
    கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி, திருப்பூர் என 2 கோட்டங்களாகவும், பொள்ளாச்சி, உலாந்தி, மானாம்பள்ளி, வால்பாறை, உடுமலை, அமராவதி என 6 வனச் சரகங்களாகவும் பிரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது. இங்கு பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. 
    ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வால்பாறையில் அதிக அளவில் யானை- மனித மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. 
    பொள்ளாச்சி வனச் சரகத்தை ஒட்டிய பகுதிகளில் சில நேரங்களில் யானை - மனித மோதல்கள் இருந்து வருகின்றன. 
    ஒரு மாதத்துக்கு முன் பொள்ளாச்சி வனச் சரகம், நவமலை வனப் பகுதியில் ஒரு முதியவரும், ஒரு சிறுமியும் யானையின் தாக்குதலில் உயிரிழந்தனர். 
    அதையடுத்து, மலைவாழ் மக்கள் இரவு நேரத்தில் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். 
    யானை நடமாட்டம் குறைந்ததால், மலைவாழ் மக்கள் வழக்கம்போல தங்கள் குடியிருப்புகளிலேயே வசித்து வந்தனர். இச்சூழலில், நவமலை மலைவாழ் மக்கள் குடியிருப்புக்குள் செவ்வாய்க்கிழமை நுழைந்த ஒற்றை யானை இரண்டு குடிசைகளை சேதப்படுத்தியது. 
    மீண்டும் புதன்கிழமை அதிகாலை சென்ற ஒற்றை யானை, மலைவாழ் மக்களின் குடியிருப்பை சேதப்படுத்தியது. தொடர்ந்து ஒற்றை யானையின் அச்சுறுத்தல் இருப்பதால் மலைவாழ் மக்கள் அச்சத்தில் உள்ளனர். 
    இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், நவமலை பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 
    பொள்ளாச்சி வனச் சரகத்தில் பணியாற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்கு மாவட்ட வன அலுவலர் முறையாக ஊதியம் வழங்காததால் அங்கு பணியாற்றும் 25 வேட்டைத் தடுப்புக் காவலர்கள் தற்போது பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நவமலை பகுதிக்குள் ஒற்றை யானை புகுந்து சேதப்படுத்தியதைத் தடுக்க முடியாமல் போனதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.      
    விரைவில் பாதுகாப்பான குடியிருப்பு: ஒற்றை யானையால் பிரச்னை ஏற்படுவது குறித்து பொள்ளாச்சி கோட்டாட்சியர் ரவிகுமார் கூறுகையில், நவமலையில் யானை அச்சுறுத்தல் இருப்பதால், மலைவாழ் மக்களைப் பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பான குடியிருப்புகள் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 
    பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் காசிலிங்கம் கூறுகையில், மலைவாழ் மக்களின் குடியிருப்புகளைச் சுற்றிலும் மின்வேலி அமைக்க உள்ளோம். தற்போது, மின்வாரியக் குடியிருப்பில் மலைவாழ் மக்களை தற்காலிகமாகத் தங்க வைத்துள்ளோம் என்றார்.

     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai