Enable Javscript for better performance
பிரதமருக்கு ஒரு லட்சம் தபால் அட்டை அனுப்பும் போராட்டம்: ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    பிரதமருக்கு ஒரு லட்சம் தபால் அட்டை அனுப்பும் போராட்டம்: ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்

    By DIN  |   Published on : 25th July 2019 01:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tiruvarur

    திருவாரூர் தபால் நிலையத்தில் தபால் அட்டை அனுப்பி போராட்டத்தை தொடங்கி வைத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான வை. சிவபுண்ணியம்.


    ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி திருவாரூரில் அனைந்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் பிரதமருக்கு ஒரு லட்சம் தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
    ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும், டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, பிரதமருக்கு 25 லட்சம் தபால் அட்டைகளை அனுப்புவது என அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் அறிவித்திருந்தது. 
    அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களை சந்தித்து ஒரு லட்சம் தபால்களில் கையெழுத்து பெற்று, அனுப்பும் போராட்டம் புதன்கிழமை தொடங்கியது. 
    திருவாரூர் தபால் நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சு. பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலரும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான வை. சிவபுண்ணியம், போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். 
    போராட்டத்தில், இளைஞர் பெருமன்றத்தின் மாநில துணைச் செயலர் துரை. அருள்ராஜன் பேசியது:
    காவிரி டெல்டா  மாவட்டங்களை பெட்ரோலிய மண்டலமாக அறிவித்து, ஹைட்ரோகார்பன் எடுக்க, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு தமிழக அரசும் துணை போகிறது. திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 41 இடங்களில் 274 கிணறுகள் தோண்டி, எரிவாயு எடுப்பதற்கான பணிகள் நடைபெற உள்ளன. இந்த திட்டத்தால், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, விளைநிலங்கள் பாலைவனமாக மாறிவிடும். 
    எனவே, இத்திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தொடங்கப்பட்டுள்ள தபால் அனுப்பும் போராட்டம், வரும்  29- ஆம் தேதி வரை நடைபெறும். அனைத்து கிராம மற்றும் நகரப் பகுதிகளுக்கும் சென்று, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும்  கையெழுத்து பெற்று தபால் அனுப்பப்படும் என்றார்.
    இப்போராட்டத்தில் இளைஞர் பெருமன்றத்தின் தேசியக்குழு உறுப்பினர் பெ.முருகேசு, நிர்வாகிகள் கோ. சரவணன், எம். நல்லசுகம், ஆர். செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    இதேபோல், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மணலியிலும் இந்திய பிரதமருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற கிளைத் தலைவர் கணேஷ் தலைமை வகித்தார். செயலாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர் .



     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai