Enable Javscript for better performance
வங்கித் தேர்வில் சமூக நீதி பின்பற்றப்படவில்லை: தலைவர்கள் கண்டனம்- Dinamani

சுடச்சுட

    

    வங்கித் தேர்வில் சமூக நீதி பின்பற்றப்படவில்லை: தலைவர்கள் கண்டனம்

    By DIN  |   Published on : 25th July 2019 02:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


     பாரத ஸ்டேட் வங்கிப் பணியிடங்களுக்கான தேர்வில் சமூக நீதிக்கு எதிரான வகையில் தகுதி காண் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி,  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    மு.க.ஸ்டாலின்:  பாரத ஸ்டேட் வங்கியில் ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற நூறு மதிப்பெண்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் 61.25, பட்டியலினத்தவர் 61.25, பழங்குடியினத்தவர் 53.75 என தகுதி காண் மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினரில் 10 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வருவோர் 28.5 தகுதி காண் மதிப்பெண்கள் மட்டும் இருந்தாலே தேர்ச்சி என்பது சமூக நீதியை மத்திய பாஜக அரசு எப்படி படுகுழியில் தள்ளியிருக்கிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. 
    சமூக நீதி கட்டமைப்பைத் தகர்க்கும் வகையில், மத்திய அரசுப் பணியிடங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன பணியிடங்களில் பிற்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கும், பட்டியலின, மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கும் எட்டாக்கனியாக இருக்கும் வேலைவாய்ப்பை மேலும் பாழாக்கும் இந்த பத்து சதவீத பொருளாதார இட ஒதுக்கீட்டை மத்திய பாஜக அரசு தூக்கியெறிய வேண்டும்.
    அன்புமணி: பாரத ஸ்டேட் வங்கியின் எழுத்தர் நிலையிலான பணிகளுக்கு நடத்தப்பட்ட முதல்நிலைத் தேர்வுகளில் வெற்றி பெற்று முதன்மைத் தேர்வுகளுக்குத் தகுதி பெறுவதற்கான தகுதி காண் மதிப்பெண் தாழ்த்தப்பட்ட வகுப்பினரை விட, உயர்வகுப்பு ஏழைகளுக்கு குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. சமூக நீதிக்கு எதிரான இச்செயல் கடுமையான கண்டிக்கத்தக்கது. எந்த புள்ளிவிவரமும் இல்லாமல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு வழங்கப்பட்டுள்ள 10 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
    கி.வீரமணி: பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது சூழ்ச்சி வலை என்று ஏற்கெனவே கூறியது உண்மையாகிவிட்டது. பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் நடத்திய  தேர்வில் தாழ்த்தப்பட்டோருக்குத் தகுதி காண் மதிப்பெண்கள் 61.25 என்றும் பொதுப் பிரிவினருக்குத் தகுதி காண் மதிப்பெண்கள் 28.5 சதவீதம் என்றும் கூறப்பட்டுள்ளது. சமூக நீதிக்கு எதிரான இந்த நடைமுறையைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai