Enable Javscript for better performance
வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் மீது குண்டர் சட்டம்: சென்னை காவல்துறை எச்சரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் மீது குண்டர் சட்டம்: சென்னை காவல்துறை எச்சரிக்கை

    By DIN  |   Published on : 25th July 2019 02:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    சென்னையில் வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
    சென்னையில் கல்லூரி மாணவர்கள் பொது இடங்களில் அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதை தடுப்பதற்கு காவல்துறை பல்வேறு கடுமையான நடவடிக்கைளை எடுக்கிறது. இருப்பினும், மாணவர்கள் அவ்வப்போது மோதிக் கொள்ளும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.
    இந்நிலையில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அரும்பாக்கத்தில் செவ்வாய்க்கிழமை பட்டாக் கத்தியுடன் மோதிக் கொண்டனர். இதில் பட்டாக் கத்தியால் வெட்டுப்பட்ட மாணவர் வசந்தகுமார், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக அரும்பாக்கம் போலீஸார் 8 மாணவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், இது தொடர்பாக சுருதி, மதன் என இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
    இதையடுத்து மாணவர்களிடையே மீண்டும் மோதல் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், கல்லூரி இருக்கும் பகுதியில் புதன்கிழமை போலீஸார் பாதுகாப்புக்கு  குவிக்கப்பட்டனர். மேலும், கல்லூரி மாணவர்கள் பயணிக்கும் அரசுப் பேருந்துகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன.
    காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை: காவல்துறை அதிகாரிகள், தங்களது பகுதியில் இருக்கும் கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்கள், ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தினர். திருவல்லிக்கேணி துணை ஆணையர் சுகுணா சிங், மாநிலக் கல்லூரிக்குச் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
    அப்போது அவர்கள் கூறிய கருத்துக்களை சுகுணாசிங் கேட்டறிந்தார். இதேபோல, நந்தனம் அரசு கலைக் கல்லூரிக்கு அடையாறு துணை ஆணையர் பகலவன் சென்று மாணவர்கள், ஆசிரியர்களுடன் கலந்து ஆலோசித்தார். இதற்கிடையே, சென்னை காவல்துறையின் கிழக்கு மண்டல இணை ஆணையர் சுதாகர், கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரிக்குச் சென்று கல்லூரி முதல்வர் அருள்மொழிச் செல்வன் மற்றும் ஆசிரியர்களுடன் ஆலோசனை செய்தார்.
    பின்னர் அவர் அளித்த பேட்டி:
    உத்தரவாத சான்றிதழ்: பொது இடங்களில் தகராறு, வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் மீது என்ன நடவடிக்கை என்பது குறித்து ஆலோசித்தோம். இதில் ரௌடியிஸத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்துள்ளோம். கல்லூரிகளில் படிக்கும் சில மாணவர்கள் செய்யும் தவறான நடவடிக்கைகளால், அனைவருக்கும் கெட்டப் பெயர் ஏற்படுகிறது.
    இதை தடுப்பதற்காக தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் குறிப்பிட்ட சில மாணவர்களை கண்டறிந்து, அவர்கள் பெயரை தருமாறு கல்லூரி நிர்வாகங்களிடம் கேட்டுள்ளோம். இத்தகைய மாணவர்களை முதலில் அழைத்து எச்சரிக்கை விடுப்போம். அந்த எச்சரிக்கையையும் மீறி மாணவர்கள் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அவர்கள் பெயர்களை சரித்திர பதிவேட்டில் ஏற்றுவோம்.
    அதன் பின்னரும், அவர்கள் அடிதடி, தகராறு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி உத்தரவாத சான்றிதழ் அவர்களிடமிருந்து பெறப்படும். இதில் அவர்கள் உத்தரவாதத்தை மீறும் பட்சத்தில், சிறையில் 10 மாதங்கள் அடைக்கப்படுவார்கள்.
    குண்டர் சட்டம் பாயும்: இந்த நடவடிக்கைகளுக்கும் பின்னரும், ஒரு மாணவர் தன்னை திருத்திக் கொள்ளாமல் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவார். பொது இடங்களில் பட்டாக் கத்தியுடன் ரௌடியிஸத்தில் ஈடுபடுகிறவர்களை கல்லூரி மாணவர்களாக கருத முடியாது. இதுவரை தகராறில் ஈடுபடும் மாணவர்களை மென்மையான போக்குடன் அணுகி வந்தோம். அரும்பாக்கம் சம்பவத்துக்கு பின்னர் காவல்துறை தன்னுடைய அணுகுமுறையை மாற்றியுள்ளது. அரசுப் பேருந்தில் மாணவர்கள் தகராறு செய்தால், அங்கேயே பேருந்தை நிறுத்திவிட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கும்படி, ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் பொது இடங்களில் இனியும் தகராறு செய்தால், இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai