Enable Javscript for better performance
வறட்சி, இயற்கை சீற்றத்தால் அழிந்துபோன 20 லட்சம் தென்னை மரங்கள்!- Dinamani

சுடச்சுட

    

    வறட்சி, இயற்கை சீற்றத்தால் அழிந்துபோன 20 லட்சம் தென்னை மரங்கள்!

    By நமது நிருபர்,நாமக்கல்  |   Published on : 25th July 2019 08:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    alagarsamy

    தமிழகத்தில் வறட்சி மற்றும் இயற்கைச் சீற்றத்தால், கடந்த ஐந்து ஆண்டுகளில் 20 லட்சம் தென்னை மரங்கள் அழிந்துள்ளன. தேங்காய்க்கு போதிய விலை கிடைக்காததால், மரங்களைப் பார்த்து கண்ணீர் விடும் நிலைக்கு விவசாயிகள் பலர் ஆளாகியுள்ளனர்.
     தென்னம் பிள்ளை என்று சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு. எவ்வாறு பத்து மாதம் சுமந்து ஒரு பெண் குழந்தையைப் பெறுகிறாரோ, அதுபோல குருத்து விடுவதில் இருந்து பத்து மாதங்களுக்கு பின்பு தான் தேங்காய் என்பது உருவாகும். யார் கைவிட்டாலும் தென்னம்பிள்ளை கைவிடாது என்ற நம்பிக்கையில் ஒரு காலத்தில் விவசாயிகள் இருந்தனர். ஆனால், தற்போதைய கால மாற்றத்தால், அந்த பிள்ளைகளுக்குத் தண்ணீர் ஊற்ற முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். ஆற்றங்கரையோரப் பகுதிகளில் உள்ள தென்னை மரங்கள் ஓரளவு தாக்குப்பிடித்து வளருகின்றன. மற்ற இடங்களில் வறட்சியால் தென்னை மரங்கள் காய்ந்து, கருகி விறகுக்குக் கொண்டு செல்லும் நிலையில் உள்ளன.
     தமிழகத்தைப் பொருத்தமட்டில், பொள்ளாச்சி, பட்டுக்கோட்டை, கம்பம், கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் தென்னை மரங்கள் அதிகம் உள்ளன. மாநிலம் முழுவதும் கணக்கிட்டால் சுமார் 2 கோடிக்கும் மேலான தென்னை மரங்கள் இருக்கும். தினமும் 200 லாரிகளில் ஆயிரக்கணக்கான தேங்காய்கள், வட மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. தெய்வ வழிபாட்டுக்கும், சமையலுக்கும், எண்ணெய் தயாரிப்புக்கும், இதர தேவைகளுக்கும் தேங்காய் என்பது முக்கியக் காரணியாக உள்ளது. மரத்தில் இருந்து பறித்து ஒரு மாதம் வரையிலும், அவற்றை உரித்த பின் 2 மாதங்கள் வரையிலும் வைத்துப் பாதுகாக்க முடியும்.
     கடந்த ஆண்டு, டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் 10 லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்து விட்டன. இதனால் அப் பகுதி தென்னை விவசாயிகள் பலர் கடும் இழப்பீட்டுக்கு உள்ளாகினர். அவற்றில் இருந்து மீண்டு வரமுடியாமல் இன்றவும் தவித்துக் கொண்டிருக்கின்றனர். சாய்ந்த மரத்தை நடுவதால், மீண்டும் அவை உயிர் பெற்று விடாது. இதனால், மரங்கள் இருந்த பகுதியை முழுமையாகச் சீரமைத்து, அந்த இடத்தில் புதிய தென்னங் கன்றுகளை நடும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அவை மரமாக வளர்வதற்கு ஐந்து ஆண்டுகளாகும். இதனால் அதை நம்பியிருக்கும் விவசாயிகள் சிலர் மாற்றுத் தொழிலை நாடி வருகின்றனர். இந்த நிலையில், கொப்பரை தேங்காய்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் தகவலால், தமிழக தென்னை விவசாயிகள் பலர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
     ஏற்கெனவே 50 முதல் 150 ஏக்கர் வரையில் தென்னை விவசாயம் செய்து வருவோர், அவற்றை குத்தகை அடிப்படையில் வியாபாரிகளிடம் கொடுத்து தேங்காய் விற்பனையைச் செய்து வருகின்றனர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு தேங்காய் தொழில் செய்து வந்தோர் அதிகப்படியான லாபம் ஈட்டிய நிலையில், தற்போது வருவாயின்றித் தவிப்பதாகக் கூறப்படுகிறது. முக்கிய காரணம், தென்னை மரங்களைக் காப்பாற்றுவதற்கான நீராதாரம் இல்லாதது, அவ்வப்போது நிகழும் இயற்கை சீற்றம் போன்றவையே காரணங்களாகக் கூறப்படுகின்றன. இந்த நிலை தொடருமானால், ஓரிரு ஆண்டுகளில் தென்னை மரங்களின் எண்ணிக்கை கோடியில் இருந்து ஆயிரத்தை தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
     இதுகுறித்து தமிழ்நாடு தேங்காய் உற்பத்தியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.கே.ஏ.அழகர்சாமி கூறியது: அனைத்து மாவட்டங்களிலும் எங்களது சங்கத்தில் 1,500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தேங்காய் வியாபாரம் என்பது மிகவும் நசிந்து விட்டது. ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் சுமார் 20 லட்சம் தென்னை மரங்கள் வறட்சி, இயற்கைச் சீற்றத்தால் அழிந்து விட்டன. ஆண்டுக்கு 130 கோடி தேங்காய் உற்பத்தியான நிலையில், தற்போது 90 கோடி அளவிலேயே உற்பத்தியாகிறது. வியாபாரிகளிடம் ஒரு தேங்காயை ரூ. 5 அல்லது ரூ. 6 }க்குத்தான் விற்கிறோம். அவர்களிடம் இருந்து வாங்கும் சிறு வியாபாரிகள் விற்பனைக்குக் கொண்டு செல்லும்போது கூடுதல் லாபம் வைத்து விற்பனை செய்கின்றனர். தேங்காய் என்பது எப்போதும் ஒரே விலையில் இருக்கும் என்று சொல்லி விட முடியாது. விழாக் காலங்களில் சற்று விலை அதிகரிக்கும்.
     வட மாநிலங்களில் பண்டிகை மற்றும் உணவுப் பயன்பாட்டுக்கு தினமும் 200-க்கும் மேற்பட்ட லாரிகளில் தேங்காய் அனுப்பப்படுகிறது. நீராதாரம் இருந்தால் மட்டுமே தென்னை மரங்களை வளர்க்க முடியும் என்ற கட்டாயம் உள்ளது. பெரும்பாலான விவசாயிகள் குத்தகை அடிப்படையில் மரங்களைக் கொடுத்து விடுகின்றனர். அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு அதை வளர்க்கின்றனர்.
     பொள்ளாச்சிப் பகுதி தேங்காய் தற்போது வெளிநாடுகளுக்கு அதிகம் செல்கிறது. தற்போதைய சூழலில், தேங்காய் தொழிலைப் பாதுகாக்க அரசு அதற்கென விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ஆங்காங்கே மாவட்டங்களில் கொள்முதல் மையங்கள் அமைய வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தென்னை விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து கொப்பரைத் தேங்காய் இறக்குமதி இருக்கக் கூடாது. சேமிப்புக் கிடங்கை உருவாக்கி அரசே தேங்காய்களைக் கொள்முதல் செய்ய வேண்டும். தேங்காயில் இருந்து கிடைக்கும் உபரிகள், உரமாகவும், கயிறு திரிக்கவும், இதர பொருள்கள் தயாரிப்புக்கும் பயன்படும் என்பதால், அதற்கான தொழிற்கூடங்களை மாவட்ட வாரியாக அமைத்திட வேண்டும். இவ்வாறான நிலை உருவானால், தேங்காய் உற்பத்தியில் தமிழகம் செழிக்கும் என்றார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai