Enable Javscript for better performance
ஹூண்டாய் நிறுவனத்தின் மின்கல கார்கள் இயக்கம்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்- Dinamani

சுடச்சுட

    

    ஹூண்டாய் நிறுவனத்தின் மின்கல கார்கள் இயக்கம்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

    By DIN  |   Published on : 25th July 2019 05:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    cm

    தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை மின்சாரத்தில் இயங்கும் கோனா எலெக்ட்ரிக்  காரை கொடியசைத்து தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,


    தனியார் நிறுவனமான ஹூண்டாய் நிறுவனத்தின் மின்கல கார்கள் இயக்கத்தை முதல்வர் பழனிசாமி புதன்கிழமை தலைமைச் செயலகத்தில் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். 
    தமிழக அரசு சார்பில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஹூண்டாய் நிறுவனத்துக்கும், தமிழக அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் வளாகத்தில் ஹூண்டாய் நிறுவனம் தனது நான்காவது விரிவாக்கத் திட்டத்தை ரூ.7 ஆயிரம் கோடி முதலீட்டில் செயல்படுத்த முடிவு செய்தது. இதன் மூலம், 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும், மின்சாரத்தில் இயங்கும் வகையிலான ஒரு லட்சம் கார்கள் உற்பத்தி செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
    கோனா எலக்ட்ரிக் கார்: தமிழக அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் மின்கலத்தில் இயங்கும் கார்களை உற்பத்தி செய்யும் பணிகளை ஹூண்டாய் நிறுவனம் தொடங்கியது. இந்தக் கார்களின்  இயக்கத்தை, முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இருந்து புதன்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
    கோனா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கார், உயர் தொழில்நுட்பத்துடன் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், 57 நிமிடங்களில் 80 சதவீதம் மின்னேற்றம் செய்யும் வசதி கொண்ட மின்கலன்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் ஹூண்டாய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். ஒருமுறை முழுமையாக மின்னேற்றம் செய்வதன் மூலமாக 452 கிலோமீட்டர் தூரம் தடையின்றி பயணிக்கலாம் எனக் கூறினர். இதுபோன்ற கார் தயாரிக்கப்படுவது இந்தியாவில் இதுவே முதல்முறையாகும்.
    கோட்டைக்குள் பயணம்: தலைமைச் செயலக வளாகத்தில் கார்களின் இயக்கத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்து பின்னர், அதில் பயணம் செய்தார். அப்போது, காரின் பின் இருக்கையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜூ ஆகியோர் அமர்ந்திருந்தனர். தலைமைச் செயலகம் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் உள்புறத்திலேயே அவர்கள் காரில் பயணித்தனர்.
    இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் க.சண்முகம், தொழில்துறை முதன்மைச் செயலாளர் என்.முருகானந்தம், தொழில் துறை சிறப்புச் செயலாளர் வி.அருண்ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி-ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் கா.ப.கார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai