முதலமைச்சர் பொறுப்புக்கு உகந்த பேச்சா?: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி 

முந்தைய ஆட்சியிலும் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தற்போதும் நடைபெற்று வருகின்றது என்று முதலமைச்சர் கூறுவது, அவர் வகிக்கும் உயரிய பொறுப்புக்கு உகந்ததா என்று இ.கம்யூ கேள்வி எழுப்பியுள்ளது.
முதலமைச்சர் பொறுப்புக்கு உகந்த பேச்சா?: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி 

சென்னை: முந்தைய ஆட்சியிலும் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தற்போதும் நடைபெற்று வருகின்றது என்று முதலமைச்சர் கூறுவது, அவர் வகிக்கும் உயரிய பொறுப்புக்கு உகந்ததா என்று இ.கம்யூ கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு வியாழனன்று விடுத்துள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தமிழ்நாடு அரசு தவறி விட்டது. கொலைகள், கொள்ளைகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டு இருப்பது, கவலைக்கும், கண்டனத்திற்கும் உரியதாகும். எவருடைய உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை நீடித்து, பொதுமக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாநகரத்தில் பட்டப்பகலில், மாநகர முன்னாள் மேயரும், தி.மு.க. தலைவர்களில் ஒருவருமான திருமதி உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கர் அவர்களுடைய வீட்டில் பணியாற்றிய திருமதி மாரி ஆகிய மூவரும் படுகொலை செய்யப்பட்டு, வீட்டில் உள்ள நகை மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து கொலைகள் நடைபெற்று வருகின்றது. சேலம் மாவட்டம் நங்கவள்ளியில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் சகோதரர் வேலு தங்கமணி மீது கொலைவெறி தாக்குதல் நடைபெற்று, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அபாய கட்டத்தை தாண்டாத நிலையில் உள்ளார்.

ஆணவ படுகொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி ஒவ்வொருவரின் உயிருக்கும் பாதுகாப்பு அளித்திட வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு உண்டு. ஆனால் முதலமைச்சர் முந்தைய ஆட்சியிலும் நடைபெற்றது, தற்போதும் நடைபெற்று வருகின்றது என்று கூறுவது, அவர் வகிக்கும் முதலமைச்சர் என்ற உயரிய பொறுப்புக்கு உகந்ததா?

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, பொது மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் உரிய பாதுகாப்பையும், அச்சம் மற்றும் மக்கள் வாழ்வாதாரத்திற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அரசு முன்வர வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com