வங்கி ஏடிஎம்மில் பணமெடுக்கும் முன் செய்ய வேண்டிய மிக முக்கிய விஷயம் இது!

சென்னை அயனாவரத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி பண மோசடி செய்ய முயன்ற சம்பவத்தில், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்கி ஏடிஎம்மில் பணமெடுக்கும் முன் செய்ய வேண்டிய மிக முக்கிய விஷயம் இது!

சென்னை அயனாவரத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி பண மோசடி செய்ய முயன்ற சம்பவத்தில், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்த மூன்று பேரும், ஏடிஎம்களில் ஸ்கிம்மர் கருவியைப் பொருத்தி, போலி ஏடிஎம் கார்டுகளை தயாரித்து பண மோசடி செய்வதையே தங்களது தொழிலாக வைத்து செயல்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அயனாவரம் பங்காரு தெருவைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ரா.கோபி கிருஷ்ணன். இவர், அயனாவரம் கான்ஸ்டபிள் சாலையில் எஸ்.பி.ஐ. வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையத்தில் கடந்த 16-ஆம் தேதி பணம் எடுக்கச் சென்றார். அவரது கார்டு ஏடிஎம் இயந்திரத்துக்குள் சிக்கிக் கொண்டதால், கார்டை வேகமாக வெளியே இழுத்து எடுக்க கோபி முயற்சித்தார்.  அப்போது, ஏடிஎம் கார்டுடன் சேர்ந்து உள்ளே பொருத்தப்பட்டிருந்த ஸ்கிம்மர் கருவி வந்ததை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். 

மேலும் அந்த இயந்திரத்தில் ரகசிய குறியீட்டை பதிவு செய்யு கீ போர்டின் மேல் ரகசிய கேமரா இருப்பதையும் பார்த்த கோபி, உடனடியாக அயனாவரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்த போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஸ்கிம்மர் கருவியையும், ரகசிய கேமராவையும் கைப்பற்றி, விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர்.  இதற்கிடையே வழக்கின் முக்கியத்துவம் கருதி இவ் வழக்கின் விசாரணை சென்னை காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.  மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணையில், இச் சம்பவத்தில் ஈடுபடுவது ஏழுகிணறைச் சேர்ந்த அல்லா பக்ஷ், மாங்காட்டைச் சேர்ந்த அப்துல் ஹாதி, கொளத்தூரைச் சேர்ந்த இர்பான் என்பது தெரியவந்தது. இதையடுத்து , 3 பேரையும் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். தலைமறைவாகி விட்ட மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள்: அயனாவரத்தில் ஸ்கிம்மர் கருவி ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்ட உடன், இக்கும்பல் திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டையில் இரு ஏடிஎம் இயந்திரங்களில் பொருத்தியிருந்த ஸ்கிம்மர்களை எடுத்து,  அதில் பதிவாகியிருந்த தகவல்களை கொண்டு போலி ஏடிஎம் கார்டு தயாரித்து, பணத்தை திருடியுள்ளனர்.  

இவ்வாறு ஒரே நாளில் ரூ.10 லட்சம் வரை பணம் திருடி உள்ளனர். இந்தக் கும்பல், காவலாளிகள் இல்லாத, பாதுகாப்பு குறைபாடுகளுடன் இருக்கும் ஏடிஎம் மையங்களை குறி வைத்து, ஸ்கிம்மர் கருவிகளைப் பொருத்தி பணத்தை திருடியது தெரியவந்துள்ளது.  

இந்தக் கும்பல், வேறு எந்தெந்த ஏடிஎம் இயந்திரங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தியுள்ளது என போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

எனவே, நாம் நுழையும் எந்த ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி இருக்கும் என்பதை நம்மால் ஊகிக்கவும் முடியாது. சாமானியர்களான நம்மால் அதனைக் கண்டுபிடிக்கவும் முடியாது.

ஆனால் நமது ஏடிஎம் அட்டைகளில் இருந்து பணம் களவாடாமல் தடுக்க முடியும். அதற்கு நாம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன.

பொதுவாகவே காவலாளிகள் இல்லாத ஏடிஎம்களை தொடர்ந்து பயன்படுத்த வேண்டாம். ஆனால் இப்போதெல்லாம் பல ஏடிஎம்களில் காவலாளிகள் இருப்பதில்லை என்பது அடுத்த விஷயம்.

ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்ததும் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதை வேண்டுமானால் நம்மால் சோதிக்க முடியாதே தவிர, பின் எண்ணை அழுத்தும் இடத்துக்கு சற்று மேலே கேமரா ஒட்டப்பட்டிருக்கிறதா என்பதை நிச்சயம் சோதிக்க முடியும். 

சரி உங்களுக்கு அவ்வளவு நேரம் இல்லையா, ஒன்றும் செய்ய வேண்டாம், உங்கள் அட்டையை உள்ளே நுழைத்து, வலது கையால் பின் எண்ணை பதிவு செய்யும் போது, இடது கையை சரியாக பின் எண்  மேலே தெரியாமல் மறைத்தபடி வைக்கலாம். (மேலே கேமரா இருந்தால் அதற்கு எப்படி மறைப்போமோ அவ்வாறு)

இதை மட்டும் செய்தால் போதும், ஏடிஎம் அட்டையில் இருக்கும் மிச்ச சொச்ச பணம் களவாடப்படாமல் தடுக்கலாம். என்னதான் ஸ்கிம்மர் கருவியில் நமது ஏடிஎம் அட்டையின் தகவல்கள் திருடப்பட்டாலும் கூட, கேமராவில் பின் எண் பதிவானால் மட்டுமே பணத்தை எடுக்க முடியும் என்பதால் குறைந்தபட்சம் இதையாவது செய்யலாம்.

இதை நாங்கள் சொல்லவில்லை. சென்னை காவல்துறையினர் பொதுமக்களுக்கு சொல்லியிருக்கிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com