மாணவர்களை தாக்கிய மாநிலக் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை: இ. கம்யூ வேண்டுகோள் 

மாணவர்களை தாக்கிய மாநிலக் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
மாணவர்களை தாக்கிய மாநிலக் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை: இ. கம்யூ வேண்டுகோள் 

சென்னை: மாணவர்களை தாக்கிய மாநிலக் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற அடுத்த நாளே தேசியக் கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையினை வெளியிட்டது. 484 பக்கங்கள் கொண்ட அறிக்கையினை இந்தி, ஆங்கில மொழிகளில் மட்டும் வெளியிட்டது பெரும் கண்டனத்திற்குள்ளானது. பிறகு மாநில மொழிகளில் 51 பக்கங்கள் கொண்ட சுருக்கமான அறிக்கையினை வெளியிட்டது. கல்வி கொள்கையின் மீது கல்வியாளர்கள், பேராசிரியர்கள், மாணவர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் என அனைவரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அனைத்திந்திய மாணவர் பெருமன்றமும் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கல்லூரிகளில் நேற்று கல்விக் கொள்கைக்கு எதிரான போராட்டத்தை நடத்தினர். சென்னை மாநில கல்லூரியில் போராட்டம் நடத்த மாணவர்கள் முற்பட்ட போது கல்லூரி முதல்வரும், பேராசிரியர்களும் போராட்டத்தை ஒடுக்க காவல்துறையினை வரவழைத்து மாணவர்களை மிரட்டி கூட்டத்தை கலைத்தனர். போராட்டத்தை ஒருங்கிணைக்க சென்றிருந்த மாணவர் பெருமன்ற தலைவர் பாபு பிரசாத்தை கல்லூரி முதல்வரும், பேராசிரியர்களும் கடுமையாக தாக்கியது பெரும் கண்டனத்திற்குரியது.

வரம்பு கடந்த செயலில் ஈடுபட்ட பேராசிரியர்கள் மீதும் கல்லூரி முதல்வர் மீதும் உயர் கல்வி துறை உரிய நடவடிக்கை எடுத்து, மாணவர்களின் கல்வி வளாக ஜனநாயக உரிமைகளை தமிழக அரசு பாதுகாக்க வேண்டுமென்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com