பிரதமர் நரேந்திர மோடி - பாமக மாநிலங்களவை எம்.பி அன்புமணி சந்திப்பு 

மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி வெள்ளியன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி - பாமக மாநிலங்களவை எம்.பி அன்புமணி சந்திப்பு 

சென்னை: மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி வெள்ளியன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.

இதுதொடர்பாக பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சந்திப்பின் போது முதலில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட பிரதமர், அவரது பணி சிறக்க விருப்பம் தெரிவித்தார். பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களுக்கு முத்து விழா கொண்டாடப்பட்டது பற்றி மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், ஒருவர் அவரது வாழ்க்கையில் 1000 பிறைகளை காண்பது பெரும் பேறு என்றும் குறிப்பிட்டார்.  தலைநகர் தில்லிக்கு வரும்படி மருத்துவர் அய்யாவுக்கு அழைப்பு விடுத்தார்.

தமிழகத்தின் பாசன வளத்தை மேம்படுத்த கோதாவரி -காவிரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்ற பிரதமர் ‘‘ முதல் முறை பிரதமரான ஐந்தாண்டுகளில் தூய்மை இந்தியா திட்டத்தில் நான் அதிக கவனம் செலுத்தினேன். இப்போது பிரதமராகியுள்ள நிலையில், அடுத்து வரும் ஐந்தாண்டுகளில் பாசனத் திட்டங்கள் மற்றும் நதிகள் இணைப்பில் அதிக கவனம் செலுத்துவேன். கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்திற்கு எவ்வளவு கோடி செலவானாலும் அதை நான் செயல்படுத்தியே தீருவேன்’’ என்று உறுதியளித்தார்.

தமிழ்நாட்டின் காவிரிப் படுகையில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது   குறித்தும், அதற்கு கடும் எதிர்ப்பு  எழுந்திருப்பது குறித்தும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.அதைக் கேட்ட பிரதமர், சம்பந்தப்பட்ட துறையினருடன் இதுபற்றி பேசுவதாக உறுதியளித்தார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய உதவும்படியும் பிரதமரிடம் அன்புமணி இராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார். இதுகுறித்தும் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசுவதாக பிரதமர் மோடி அவர்கள் உறுதியளித்தார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com