தமிழை விட தொன்மையான மொழியா சமஸ்கிருதம்?: மத்திய பாடத்திட்ட புத்தகத்திற்கு காங்கிரஸ் கண்டனம் 

தமிழை விட சமஸ்கிருதம் தொன்மையான மொழி என்று மத்திய அரசின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழை விட தொன்மையான மொழியா சமஸ்கிருதம்?: மத்திய பாடத்திட்ட புத்தகத்திற்கு காங்கிரஸ் கண்டனம் 

சென்னை: தமிழை விட சமஸ்கிருதம் தொன்மையான மொழி என்று மத்திய அரசின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் சமஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிகளை எந்தெந்த வகைகளில் மக்களிடையே திணிப்பது என்கிற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இத்தகைய போக்கு தொடர் கதையாக இருந்து வருகிறது.

சமீபத்தில் மத்திய பாடத் திட்டத்தின் அடிப்படையில் 12 ஆம் வகுப்பிற்கு வெளியிடப்பட்ட ஆங்கில புத்தகத்தில் தமிழை விட சமஸ்கிருதம் தொன்மையான மொழி என்று குறிப்பிடப்பட்டிருப்பது தமிழக மக்களியே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், தமிழ் மொழி கி.மு. 300 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவும், சமஸ்கிருத மொழி கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான மொழியாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இத்தகைய வரலாற்று திரிபு வாதங்களை மத்திய அரசுக்கு பின்னால் இருந்து ஆர்.எஸ்.எஸ். சனாதன பரிவாரங்கள் செய்து வருகிறார்கள். இந்த பாடப் புத்தகங்களைத் தயாரிக்கிற பணியில் ஆர்.எஸ்.எஸ். பரிந்துரையின் பேரில் வகுப்புவாத உணர்வு கொண்ட கல்வியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். இதன்மூலம் சமஸ்கிருத மொழியை திணித்து தமிழர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத கலாச்சார படையெடுப்பை பா.ஜ.க. நிகழ்த்தி வருகிறது.

சமஸ்கிருத மொழியை அறிந்து கொள்ளாமல் இந்தியாவின் பண்பாட்டை அறிந்து கொள்ள முடியாது என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் 30 சதவிகித வார்த்தைகள் சமஸ்கிருத கலப்போடு இருப்பதால் அனைத்து மொழிகளையும் விட இம்மொழியே தொன்மையானது என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த கருத்தின் மூலம் சமஸ்கிருத திணிப்பு எங்கே, எவரால், எப்படித் திணிக்கப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

மத்திய பாட திட்டத்தில் 12 ஆம் வகுப்பு ஆங்கில புத்தகத்தில் தமிழர்களின் கலாச்சார, பண்பாட்டுப் பெருமையை சிறுமைப்படுத்துகிற வகையில் தமிழ் மொழியின் தொன்மை குறித்து குறிப்பிடப்பட்டிருப்பதை உடனடியாக மத்திய பா.ஜ.க. அரசு திரும்பப் பெற வேண்டும். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com