தொண்டை அடைப்பான் நோய்: வெளி மாநிலங்களில் இருந்து மருந்துகள் கொள்முதல்

தொண்டை அடைப்பான் நோய்க்கான மருந்துகள் போதிய அளவு இருப்பில் உள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


தொண்டை அடைப்பான் நோய்க்கான மருந்துகள் போதிய அளவு இருப்பில் உள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தற்போது 3 ஆயிரம் மருந்துகள் வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாகவும், அதன் வாயிலாக 300 பேருக்கு சிகிச்சையளிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்க்கொல்லி நோயாகக் கருதப்படும் டிப்தீரியா எனப்படும் தொண்டை அடைப்பான் நோயானது, பெரும்பாலும் 15 வயதுக்குள்பட்ட சிறார்களைத் தாக்கக் கூடியதாகும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது பாக்டீரியா தொற்று மூலம் அந்தப் பாதிப்பு ஏற்படும். அதற்கு உரிய சிகிச்சைகளும், தடுப்பு மருந்துகளும் எடுத்துக் கொள்ளாத பட்சத்தில் உயிரிழப்பு நேரிட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுவாக தொண்டை அடைப்பான் நோய் பாதித்தவர்களின் உடலில் மேலும் கிருமிகள் பரவாமல் இருக்க பெனிசிலின், எரித்ரோமைசின் ஆகிய மருந்துகள் வழங்கப்படும். அந்த வகையான மருந்துகள் தமிழகத்தில் போதிய அளவில் இருப்பில் உள்ளன. தொண்டை அடைப்பான் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் ஏற்கெனவே உள்ள கிருமிகளை அழிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஆண்ட்டி டிப்தீரிடிக் சீரம் என்ற மருந்தானது வெளி மாநிலங்களில் இருந்தே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
நாட்டில் மூன்று இடங்களில் மட்டுமே அந்த மருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. ஊசி மூலம் செலுத்தப்படும் அந்த மருந்தின் ஒரு அலகின் விலை மட்டும் ரூ.1,200 எனத் தெரிகிறது. தொண்டை அடைப்பான் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தது 10 அலகுகள் மருந்தினை செலுத்துவது அவசியம். கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு கேரளத்தில் அந்நோய் தீவிரமாக இருந்தபோது நாடு முழுவதும் ஆண்ட்டி டிப்தீரிடிக் சீரம்  மருந்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. இந்தச் சூழலில், நிகழாண்டில் தமிழகத்தில் சத்தியமங்கலம், தாளவாடியில் இரு சிறாருக்கு  தொண்டை அடைப்பான் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த மருந்துகளை போதிய அளவில் இருப்பு வைக்குமாறு மாவட்ட மருத்துவமனைகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
இதுகுறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறியதாவது:
தொண்டை அடைப்பான் நோயின் தாக்கத்தை கண்காணிக்க 20-க்கும் மேற்பட்ட மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு அக்குழுவைச் சேர்ந்தவர்கள் நேரில் சென்று தடுப்பு மருந்துகளை வழங்கி வருகின்றனர். ஆண்ட்டி டிப்தீரிடிக் சீரம்  மருந்துகள் தேவையான அளவு இருப்பில் உள்ளன. கூடுதலாக தேவைப்படும் பட்சத்தில் அவற்றை எளிதில் வெளியே இருந்து கொள்முதல் செய்ய முடியும். எனவே, மருந்து தட்டுப்பாடு ஏற்படுமோ? என்ற அச்சம் தேவையில்லை என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com