அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலக்கியப் போட்டிகள்: தமிழ் வளர்ச்சித் துறை அறிவிப்பு

 பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் கவிதை, கட்டுரை பேச்சுப் போட்டிகள் ஆக.7 மற்றும் ஆக.9 ஆகிய நாள்களில் நடைபெறும் என தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது. 


 பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் கவிதை, கட்டுரை பேச்சுப் போட்டிகள் ஆக.7 மற்றும் ஆக.9 ஆகிய நாள்களில் நடைபெறும் என தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது. 
இது தொடர்பாக தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:  பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே தமிழ் இலக்கியப் படைப்பாற்றலை வளர்த்திடும் வகையில் தமிழ் மன்றம் 2003-2004-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்த தமிழக அரசு ஆணையிட்டது.  
அதன்படி நிகழ் கல்வியாண்டில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழில் கவிதை, கட்டுரை,  பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 
 இந்தநிலையில் அனைத்து மாவட்டங்களிலும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படித்து வரும் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வரும் ஆக.7-ஆம் தேதி நடைபெறவுள்ளது.  
அதேபோன்று கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் வரும் ஆக.9-ஆம் தேதி நடைபெறும். 
 இணையதள முகவரியில் விண்ணப்பம்:  இந்த இலக்கியப் போட்டிகளில் கலந்து கொள்ளும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரிடம் உரிய படிவத்தில் பரிந்துரையைப் பெற்று போட்டி நடைபெறும் நாளில் மண்டல, மாவட்டத் தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர்,  உதவி இயக்குநர்களிடம் நேரில் அளிக்க வேண்டும்.  
போட்டி விதிமுறைகள்,  விண்ணப்பப் படிவம் போன்ற விவரங்களை www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
 போட்டிக்கான தலைப்புகள் போட்டி நடைபெறும் நாளில் அறிவிக்கப்படும்.  போட்டி முடிவுகளும் அதே நாளில் அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுத் தொகை வழங்கப்படும். 
பள்ளி, கல்லூரிகளில் ஒவ்வொரு போட்டிக்கும் ஒருவர் வீதம் மூன்று மாணவர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்குப் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். 
பரிசுத் தொகை எவ்வளவு?:  பள்ளி, கல்லூரி என இரு பிரிவுகளிலும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரமும்,  இரண்டாமிடம் பெறும் மாணவர்களுக்கு ரு.7 ஆயிரமும், மூன்றாமிடம் பெறுவோருக்கு ரூ.5 ஆயிரமும் பரிசாக வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com