உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள்: பணிகளை முடிக்க அறிவுறுத்தல்

 தமிழகத்தில் உள்ள 6,029 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கணினி வசதிகளுடன் கூடிய உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.


 தமிழகத்தில் உள்ள 6,029 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கணினி வசதிகளுடன் கூடிய உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் எஸ்.  கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:  தமிழகத்தில் உள்ள 6,029 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப வசதிகளுடன் ஆய்வகங்கள் அமைக்கும் பணி எல் அண்ட் டி நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  
இந்தத் திட்டத்தின்படி ஒவ்வொரு உயர்நிலைப் பள்ளிக்கும் 10 கணினிகள் உள்பட 12 உபகரணங்களும், ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளிக்கும் 20 கணினிகள் உட்பட 12 உபகரணங்களும், விநியோகம் செய்யப்பட்டு நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
இது தொடர்பாக அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் உரிய வழிகாட்டுதல்கள்  வழங்க ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனினும், மேற்கண்ட பொருள்களை விநியோகிக்கும் போது சில பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் இத்திட்டத்தின் நடைமுறைகள் பற்றி தெரியாது எனவும், பள்ளிகளில் போதுமான இடவசதிகள் இல்லை எனக்கூறி மறுப்பு தெரிவிப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. 
தமிழக அரசின் உத்தரவின்படி அனைத்துப் பள்ளிகளிலும் ஆய்வகங்கள் அமைக்கப்பட வேண்டும். எனவே, போதுமான இடவசதி இல்லாத பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வகம் அமைக்க ஏதுவான இடத்தை தலைமையாசிரியர் ஒத்துழைப்புடன் தேர்வு செய்ய வேண்டும்.  இதுதவிர,
அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் இந்தத் திட்டம் தொடர்பான வழிகாட்டுதல்களை சுற்றறிக்கை மூலம் முதன்மை கல்வி அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். 
இந்தத் திட்ட செயலாக்கத்துக்கு தனியார் நிறுவனத்தினர் பள்ளிக்கு வரும்போது முழு ஒத்துழைப்பு வழங்கி பணிகளை விரைவாக முடிக்க  தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com