வேலூர் மக்களவைத் தேர்தல்: மருத்துவத் தேர்வுகள் ஒத்திவைப்பு

வேலூர் மக்களவைத் தேர்தலையொட்டி, வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறவிருந்த மருத்துவப் படிப்புகளுக்கான


வேலூர் மக்களவைத் தேர்தலையொட்டி, வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறவிருந்த மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அத்தேர்வுகள் வேறு தேதியில் நடைபெறும் என்று தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், சென்னையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்தி அடுத்தகட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்லும் நடவடிக்கைகளை பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது.
நிகழ் கல்வியாண்டில் முதுநிலை பொது சுகாதார இதழியல் என்ற பட்டயப் படிப்பு பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஓராண்டு கால அப்படிப்புக்கு மாணவர் சேர்க்கை மற்றும் விண்ணப்பப் பதிவு நடைமுறைகள் செப்டம்பர் மாதத்தில் தொடங்க உள்ளன.
 அடிப்படை சுகாதாரம், நோய்களின் தாக்கம், பொது சுகாதாரம் குறித்த விவரங்கள், மருத்துவம் சார் சட்டங்கள், மருத்துவக் குற்றங்கள், மருந்தியல், ஊட்டச் சத்து குறைபாடுகள், ஆயுஷ் பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அப்படிப்பில் கற்பிக்கப்பட உள்ளன.
ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் நடைபெறுகிறது. அன்றைய தினத்தில் மருத்துவம், பல் மருத்துவம், ஹோமியோபதி, இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வுகள் நடத்த ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், தேர்தல் காரணமாக  6,  7-ஆம் தேதிகளுக்கு தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன.
புதிய தேர்வு அட்டவணை குறித்த விவரங்களைwww.tnmgrmu.ac.in  என்ற இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com