
அண்ணா நினைவு நாளில் கோயில்களில் அன்னதானம், இலவச வேஷ்டி, சேலைகள் ஆகியவற்றை கோயில் பணத்தைக் கொண்டு வழங்க தடைக் கோரிய மனு மீதான விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பெரியநம்பி நரசிம்ம கோபாலன் தாக்கல் செய்த மனு:
அண்ணா நினைவு நாளில் தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களில் அன்னதானம், இலவச வேஷ்டி, சேலைகள் வழங்கப்படுகிறது. இதற்கு கோயில்களில் இருந்து பணம் செலவிடப்படுகிறது. ஆனால், பேரறிஞர் அண்ணா இந்து சமயம், கடவுள், கோயில்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்.
அவர் எழுதிய ஆரிய மாயை என்ற புத்தகத்தில், நாலு தலை சாமிகள், மூன்று கண்கள், ஆறுமுகசாமி என பல தெய்வங்கள் இந்து மதத்தில் உள்ளன. இதுபோன்ற காரணங்களால் இந்து என்று கூறினால், உலக மக்கள் நம்மை கேவலமாகக் கருதுவர் என பல இடங்களில் இந்து மதத்திற்கு எதிராக கருத்துகளை தெரிவித்துள்ளார்.
அப்படியிருக்க இந்து கோயில் வருவாயைக் கொண்டு அவரது நினைவு தினத்தில் அன்னதானம், இலவச வேஷ்டி, சேலைகள் வழங்குவது எப்படி நியாயமாக இருக்கும். எனவே, அண்ணா நினைவு நாளில் இந்து கோயில்களில் சிறப்பு அன்னதானம் மற்றும் இலவச வேஷ்டி, சேலை வழங்குவதற்கு தடைவிதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், பி. புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் இதுகுறித்து கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.