
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் தொடங்கியுள்ள ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நிர்வாகப் பணிகள் முடங்கியுள்ளன.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதியம் வழங்கிட வேண்டும், எம்சிஐ விதிப்படி டாக்டர்களின் எண்ணிக்கையை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் குறைக்கக்கூடாது, நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்துள்ள அரசு மருத்துவர்களுக்கு பணியிட கலந்தாய்வு நடத்திட வேண்டும்என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக, அரசு மருத்துவர்கள் ஒன்றாக இணைந்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பை தொடங்கினர். ஜனநாயக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம், அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கம், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் இடம்பெற்றன. இந்த கூட்டமைப்பில் எடுக்கப்பட்ட முடிவின்படி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் ஒத்துழையாமை இயக்கம் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினர். பயிற்சி முகாம்கள் நடத்துவது, நோயாளிகளின் விவரங்களை அனுப்புவது, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பணி உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் நிறுத்தினர். இதேபோல் மாதந்தாறும் நடைபெறும் இறப்பு ஆய்வுக்கூட்டத்தையும் புறக்கணித்தனர். மருத்துவர்களின் ஒத்துழையாமை இயக்க போராட்டத்தால் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நிர்வாகப் பணிகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன.
மனிதச் சங்கிலி- உண்ணாவிரதம்: இதுதொடர்பாக அரசு மருத்துவர்கள் கூறியது: அரசு மருத்துவர்களின் ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தால் அரசு மருத்துவமனைகளில் நிர்வாகப் பணிகள் முடங்கியுள்ளன.
ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்துவது நிறுத்தப்படும். ஏழை நோயாளிகளுக்கு அறுவைச் சிகிச்சைகள் செய்யப்படும். ஆனால், அரசுக்கு வருவாய் கிடைக்காது.
இதையடுத்து, 20-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பங்கேற்கும் மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெறும். இதைத் தொடர்ந்து, 23-ஆம் தேதி முதல் சென்னையில் அரசு மருத்துவர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்குவார்கள். இறுதிக் கட்டமாக, 27-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்றனர்.