
ஆணவக் கொலைகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக டிஐஜியை நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.
ஆணவக் கொலைகள் தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. உச்சநீதிமன்றம் ஆணவக் கொலைகளைத் தடுக்க பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. எந்த மாவட்டத்தில் அதிகமான ஆணவக் கொலைகள் நடைபெறுகின்றன என்பதை அடையாளம் காண அனைத்து மாநில உள்துறைச் செயலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018-இல் உச்சநீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை அமல்படுத்த தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம்பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், தமிழகம் முழுவதும் ஆணவக் கொலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அறிக்கை தொடர்பாக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் 1,300 காவல் நிலையங்கள் உள்ளன. அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்புப் பிரிவு அமைப்பது என்பது சாத்தியமற்றது. ஆணவக் கொலைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு இதுவரை ஒரு துண்டுப் பிரசுரம் கூட வெளியிடவில்லை என கருத்து தெரிவித்தனர். மேலும் இந்த அறிக்கையைத் தாக்கல் செய்த காவல்துறை டிஐஜியை நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு (ஜூலை 30) ஒத்திவைத்தனர்.