
மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்ற பூசாரிகள் மற்றும் அருள்வாக்கு புரிவோர் மாநில மாநாட்டில் பேசுகிறார் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலர் விநாயகராவ் தேஷ்பாண்டே.
மத மாற்றத்தில் ஈடுபடும் தீய சக்திகளை முறியடிக்க வேண்டும் என்றால் இந்துக்கள் ஒற்றுமையாக இருப்பது காலத்தின் கட்டாயம் என்று விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலர் விநாயகராவ் தேஷ்பாண்டே பேசினார்.
மதுரையில் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கத்தின் சார்பில் வைகைப் பெருவிழா கடந்த 24-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் ஏழாம் நாள் நிகழ்ச்சியாக விஸ்வ இந்து பரிஷத் சார்பில் பூசாரிகள் மற்றும் அருள்வாக்கு புரிவோர் மாநில மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
மாநாட்டுக்கு விஸ்வ இந்து பரிஷத் மாநிலத் துணைத் தலைவர் வி. சக்திவேல் தலைமை வகித்தார். கமலா அனந்த சயனம், ஜவஹர் அனந்த சயனம், ஜெகன்நாதன் செட்டியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், கோவை கௌமார மடாலய சிரவையாதீனம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள், அகில பாரதிய சந்நியாசிகள் சங்க துணைத் தலைவர் சுவாமி ராமானந்தா, திருவண்ணாமலை சடைச்சாமிகள் ஆஸ்ரம மடாதிபதி திருப்பாத சுவாமிகள், சேலம் தேஜோமயானந்தா ஆஸ்ரம மடாதிபதி ஆத்மானந்த சுவாமிகள், சுவாமி வேதாந்த ஆனந்தா ஆகியோர் ஆசியுரை வழங்கினர்.
மாநாட்டில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலர் விநாயக ராவ் தேஷ்பாண்டே சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியது:
உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் சாதி, சமய வேறுபாடின்றி அனைவரும் சகோதரர்கள் என்ற கருத்துடன் விஸ்வ இந்து பரிஷத் இயங்கி வருகிறது. இதே அடிப்படையில் உலகம் முழுவதும் உள்ள இந்துக்களை ஒரே குடையின்கீழ் திரட்டும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது. நாட்டில் உள்ள ஆலயங்களில் சாதி வேறுபாடின்றி அனைத்து இந்துக்களும் அர்ச்சகர்களாகவும், வேதங்கள், ஆகமங்கள் உள்ளிட்ட அனைத்திலும் அனைவருக்கும் சம உரிமையை பெற்றுத்தரவும் பாடுபட்டு வருகிறோம். மேலும் அயோத்தியில் ராமருக்கு ஆலயம் கட்டுவதை லட்சியமாக கொண்டு விஸ்வ இந்து பரிஷத் செயல்பட்டு வருகிறது.
நாட்டில் அண்மைக்காலமாக இந்து மதத்தின் மீதும், கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் மீதும் பல்முனை தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன. இந்து மதத்தின் மீது விரக்தியை ஏற்படுத்தி இந்துக்களை மதம் மாற்றுவது அதிகரித்து வருகிறது. எனவே, மத மாற்றுதலுக்கு எதிராக விஸ்வ இந்து பரிஷத் போராடி வருகிறது. இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து மத மாற்றத்தில் ஈடுபடும் சக்திகளை விரட்டியடித்து அவர்களின் முயற்சியை முறியடிக்க வேண்டும் என்றார்.
மாநாட்டில், நீர்நிலைகள் பாதுகாப்பில் பூசாரிகளின் பங்கு என்ற தலைப்பில் மாநில கொள்கை பரப்புச் செயலர் வை.தா.ர.மூர்த்தி, தேசிய இணைச் செயலர் எஸ்.கோபால் ரத்தினம், அமைப்புச் செயலர் பி.எம்.
நாகராஜன், வடதமிழக மாநிலத் தலைவர் சீனுவாசன், தென் தமிழக மாநிலத் தலைவர் தெரி.குலைக்காதர், பொதுச் செயலர் ராம. சத்தியமூர்த்தி, தென் தமிழக அமைப்புச் செயலர் ஆர். சேதுராமன் உள்ளிட்டோர் பேசினர். மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட பூசாரிகள் மற்றும் அருள்வாக்கு கூறுவோர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு வைகை நதிக்கு ஆரத்தி வழிபாடும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
கோயில்களில் சிறப்பு தரிசனகட்டண முறையை ரத்து செய்ய வேண்டும்
தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கோயில்களில் சிறப்பு தரிசன கட்டண முறையை ரத்து செய்ய வேண்டும் என்று பூசாரிகள் மற்றும் அருள்வாக்கு புரிவோர் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரையில் நடைபெற்று வரும் வைகை பெருவிழா 2019-இன் ஒரு பகுதியாக தமிழக பூசாரிகள் மற்றும் அருள்வாக்கு புரிவோர் மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. மாநாட்டில், ஆலயங்களில் உள்ள திருக்குளங்களை மீட்டு சீரமைக்க வேண்டும். அவற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும். இதற்காக பொதுமக்கள், அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும். இறைவன் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டுக்கு இணங்க, கோயில்களில் வசூலிக்கப்படும் அனைத்து சிறப்பு மற்றும் கட்டண தரிசனங்களை ரத்து செய்ய வேண்டும்.
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு தானமாக வரும் பசுக்களுக்கு கோசாலைகளை அமைத்து பராமரிக்க வேண்டும்.
தமிழகத்தில் சிதிலமடைந்துள்ள பழங்கால கோயில்களை கண்டறிந்து அவற்ற புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோயில்களுக்கு சொந்தமான சொத்துகள் கடைகள், நிலங்கள் ஆகியவற்றை, மாற்று மதத்தினருக்கு குத்தகை, வாடகைக்கு வழங்கக் கூடாது.
தமிழகத்தில் குறைந்தது 5 ஆண்டு காலம் பூசாரியாக பணியாற்றியவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். பூசாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும். வீடற்ற பூசாரிகளுக்கு அரசின் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.