
வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் சென்னை, எந்த ஆண்டும் இல்லாத வகையில் பெற்ற தாயை இழந்தது போல நிலத்தடி நீரை இழந்து பரிதவித்துக் கொண்டிருக்கிறது.
சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் கர்நாடகா - தமிழ்நாடு எல்லைப் பகுதியான அஜ்ஜிப்பாறையின் ஸீரோ பாயிண்டில் இருந்து காவிரி நீர் சென்னையில் உள்ள அடிதட்டு மக்களின் வீடு வரை கொண்டு வந்த புதிய பாதையை விளக்கும் புகைப்படங்களின் தொகுப்பு இது.
காவிரி நீர் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில்கள் மூலம் சென்னைக்குக் கொண்டு வந்து விநியோகிக்கும் திட்டத்தை தமிழக அரசு சமீபத்தில் நிறைவேற்றியது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஜ்ஜிப்பாறை ஸீரோ பாயிண்டில் காவிரி ஆற்றின் பயணம் தொடங்குகிறது. உரிகாம் வனப்பகுதிக்குள் நுழைந்து, இங்குதான் காவிரி நீர் தமிழகத்தின் எல்லையைத் தொட்டு முத்தமிடுகிறது.
அஜ்ஜிப்பாறை வனப்பகுதிக்குள் காவிரி ஆற்றை புகைப்படம் எடுக்கச் சென்ற போது தரையில் பதிந்திருந்த சிறுத்தையின் கால் தடம்.
இதுவரை மேடுபள்ளங்களை எல்லாம் கடந்து ஆறாக வந்து கொண்டிருந்த காவிரி, ஒகேனக்கல் பகுதியில் அருவியாகக் கொட்டி தமிழகத்தை அடைந்துவிட்டதை குதித்து குதூகலிப்பது போல காட்சி தருகிறது.
இது நிச்சயம் என்னவென்று தெரிந்திருக்கும். ஆம், மேட்டூர் அணைக்குள் அமைந்திருக்கும் புகழ்பெற்ற நந்தி சிலைதான். ஜலகண்டேஸ்வரர் கோயிலின் நந்தி சிலை, மேட்டூர் அணையில் தண்ணீர் நிரம்பிவிட்டால் முழுவதுமாக தண்ணீருக்குள் மூழ்கிவிடும். தற்போது கம்பீரமாக மேட்டூர் அணையின் பரப்புகளை பார்த்துக் கொண்டிருக்கிறது இந்த நந்தி.
பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட தேவாலயத்தின் புகைப்படம். இதுவும் மேட்டூர் அணைக்குள் அமைந்திருக்கிறது. தற்போது மேட்டூர் அணை வறண்டு காணப்படும் காட்சி இது.
மேட்டூர் அணைக்கு அருகே இருக்கும் செக்கனூர் கதவணையில் சேமிக்கப்படும் காவிரி நீர். இங்கிருந்துதான் குழாய்கள் மூலம் காவிரி நீர் பம்ப் செய்யப்பட்டு வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டைக்குக் கொண்டு வரப்படுகிறது.
ஜோலார்பேட்டையில் தரைமட்டக் குழாயில் இருந்து ரயில் வேகான்களில் காவிரி நீர் ஏற்றப்படுகிறது.
ஜோலார்பேட்டையில் இருந்து குடிநீரை சுமந்து கொண்டு சென்னை மக்களின் தாகம் தீர்க்க வில்லிவாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தடையும் தண்ணீர் ரயில்.
கீழ்ப்பாக்கம் மெட்ரோ குடிநீர் ஆலையில் காவிரி நீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.
சுத்திகரிக்கப்பட்ட காவிரி நீர், மெட்ரோ குடிநீர் வாரியத்தின் லாரிகள் மூலம் சென்னை மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் விநியோகிக்கப்படுகிறது.
இவ்வாறு, குடகில் தோன்றும் காவிரி நீரானது, புதிய பாதையில் பயணித்து சென்னை மக்களின் குடங்களில் நிரம்புகிறது.
Photo - Shiba Prasad Sahu