
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துவரும் நிலையில், காரைக்காலும் காவிரி நீர் வந்து விடும் என்ற உற்சாகத்தில் காவிரி நீரை வரவேற்க தயாராகும் மாவட்ட நிர்வாகத்துக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுத் தெரிவிக்கின்றனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் பிராந்தியம் காவிரி நீரை மட்டுமே நம்பி விவசாயம் செய்யக் கூடிய நிலப் பரப்பைக் கொண்டுள்ளது. சில இடங்களில் ஆழ்குழாய் தண்ணீரைப் பயன்படுத்தி சாகுபடி நடைபெறுகிறது. இதனால் ஆண்டுக்கு சம்பா, தாளடியாக 5 ஆயிரம் ஹெக்டேர் நெல் சாகுபடி நடந்து வருகிறது. ஜூன், ஜூலை மாத வாக்கில் காவிரி நீர் வரும்போது, புதுச்சேரி அரசு பொதுப்பணித் துறைக்கு குறிப்பிட்ட நிதி ஒதுக்கி ஆறு, வாய்க்கால்களை தூர்வாரப்படும். தண்ணீர் வரத்து தொடங்கிய பிறகும் தூர்வாரும் பணிகள் கடந்த ஆண்டு வரை நடைபெற்று வந்த நிலை உண்டு.
நிகழாண்டு புதுச்சேரி அரசின் நிதியாதாரத்தை கருத்தில் கொள்ளாமல், காரைக்கால் மாவட்ட நிர்வாகம் அரசுத் துறைகள், தன்னார்வலர்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலை நிர்வாகத்தினர், கோயில் நிர்வாகத்தினர் நிதி ஆதரவில் வாய்க்கால்கள், குளங்களை தூர்வாரி தண்ணீரை சேமிக்கவும், வயல் பகுதிகளுக்கு தடையின்றி தண்ணீர் செல்ல ஏதுவான திட்டத்தை தொடங்கி நடத்தி வருகிறது. இந்த திட்டப்பணி காரைக்கால் வரலாற்றில் முன்னெப்போதும் செய்யாதது என்று விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர். மேட்டூர் அணை படிபடியாக நிரம்பி வருவதை அறிந்த காரைக்கால் விவசாயிகள் வேளாண் தொழிலில் ஈடுபட தேவையான முன்னேற்பாடுகளை செய்யத் தொடங்கியுள்ளனர்.
ஆடிப்பட்டம் தேடி விதை எனும் வாக்குக்கேற்ப ஆடி மாதத்தில் காவிரியை நம்பி விதைப்பதற்கான சூழல் நிகழாண்டு ஏற்படவில்லை. ஆடி 18-ஆம் தேதி ஆடிப்பெருக்கு நாளில் ஆறு, வாய்க்காலில் தண்ணீர் வரத்துக்கான சூழலும் முற்றிலும் இல்லை. எனினும் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும்போது, அடுத்த ஒரு மாதத்தில் தண்ணீர் கடை மடைப் பகுதிக்கு வருவதற்கான சூழல் ஏற்படுமென விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இதற்கேற்ப காரைக்கால் பகுதி விவசாயிகள், நேரடி நெல் விதைப்பு, சம்பா பருவ சாகுபடிக்கான முன்னேற்பாடுகளை செய்யத் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறியது: காரைக்கால் மாவட்டத்தில் நீர்நிலைகளை தூர்வார மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கை பாராட்டுக்குரியது. தமிழகத்தில் ஏற்பட்ட குடிநீர் பஞ்சமே காரைக்காலில் நீராதாரத்தைப் பெருக்கவேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. சரியான திட்டமிடலுடன் வாய்க்கால், குளங்கள் தூர்வாரப்படுகின்றன. காவிரி நீர் வரும் போது தடையின்றி விளை நிலைத்துக்கு செல்லவும், குளங்களில் தண்ணீரை சேமித்து வைக்கவும் முடியும். இதன் மூலம் நிலத்தடி நீர் பெருக வாய்ப்புண்டு.
பல ஆண்டுகளாக நீரின்றி சாகுபடி நடைபெறாததால் கருவேல மரங்கள் மண்டியுள்ளதை அழிக்க சிறப்புத் திட்டம் வகுத்தி செயல்படுத்தினால் சிறப்பாக இருக்கும். காவிரி நீர் தாமதமாக வரவுள்ளது. அடுத்த 2 மாதங்களில் பருவ மழை தொடங்கிவிடும். எனவே இந்த தருணத்தில் பயிர் பாதிக்காத வகையில் எந்த வகையான ரகத்தை பயிரிடலாம், அதன் பராமரிப்பு முறைகள் குறித்து வேளாண் துறை, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவை விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். விதை நெல், உரம் போன்ற இடுபொருள்கள் விவசாயிக்கு எது தேவையோ அதை அரசு நிறுவனங்கள் இருப்பு வைத்து வழங்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா கூறியது: நிகழாண்டு பருவ மழையை கருத்தில் கொண்டு, காரைக்காலில் தண்ணீரை சேமிக்கத் தேவையான திட்டமாகவே குளங்கள் தூர்வாரும் பணியை மேற்கொள்ளத் தொடங்கினோம்.
நிறுவனங்கள் தன்னார்வமாக நிதியளிக்க முன்வந்ததால் அனைத்து வாய்க்கால்களையும் தூர்வாருவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம். காரைக்கால் துறைமுகம், திருநள்ளாறில் ஜோதி லெபாரட்ரீஸ் போன்ற நிறுவனங்கள் பல கி.மீ., தூரத்துக்கான வாய்க்கால்களை தூர்வார நிதி ஒதுக்கி பணிகளை செய்துவருகின்றன.
மாவட்டத்தில் பயன்பாடில்லாத 100 குளங்கள் கண்டறியப்பட்டு அவற்றை தூர்வாரி தண்ணீரை நிரப்ப ஏற்பாடுகள் செய்து வருகிறோம். இதுவரை 22 குளங்கள் தூருவாரும் பணி நிறைவடைந்துள்ளன. அடுத்த ஒரு மாதத்தில் பெரும்பாலான குளங்கள் தூர்வாரி முடிக்கப்படும். இந்த திட்டம் தொடங்கியதால் 50 ஆண்டுகளாக பயன்பாடில்லாத, தூர்வாரப்படாத குளங்கள் பல பயன்பாட்டுக்கு வருகின்றன. தூர்வாருமிடங்களை பார்வையிடச் செல்லும்போது பொதுமக்கள் திரளாக வந்து இத்திட்டத்தை பாராட்டுவது உற்சாகமாக இருக்கிறது.
தவிர, காவிரி நீரின் வரத்து உறுதியாகியுள்ள நிலையில், விவசாயிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். பாசிக் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஆழ்குழாய் கிணறுகளை மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் பராமரித்து விவசாயிகள் பயன்படுத்தவும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. நிகழாண்டு காவிரி நீர், மழை, ஆழ்குழாய் பாசன முறையை பயன்படுத்தி காரைக்கால் விவசாயிகள் தாராளமாக வேளாண்மையை செய்ய முன்வரலாம். அவர்களுக்குத் தேவையான ஆதரவை காரைக்கால் மாவட்ட நிர்வாகம் செய்யும் என்றார் அவர்.
காரைக்கால் மாவட்டம் காவிரி நீரை வரவேற்கும் வகையில் நீர்நிலைகளை மேம்படுத்துதல், வேளாண் துறை சார்பிலான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதலில் ஈடுபட்டுள்ளது விவசாயிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.