
தனியார்மயமாகவிருந்த என்.எல்.சி., சேலம் உருக்காலை ஆகியவற்றை போல, ரயில்வே துறையையும் தனியார்மயமாவதிலிருந்து மீட்கப்படும் என்றார் எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச் செயலர் கண்ணையா.
ரயில்வே துறையைத் தனியார்மயமாக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருச்சி பொன்மலை மத்திய பணிமனையில் திங்கள்கிழமை கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு எஸ்.ஆர்.எம்.யூ. துணைப் பொதுச் செயலர் வீரசேகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்று பேசிய கண்ணையா, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் வகையில் மத்திய பா.ஜ.க. அரசு, 100 நாள் திட்டத்தின் அடிப்படையில், ஒவ்வொரு மண்டலத்திலும் 2 ரயில்களை தனியாரிடம் ஒப்படைக்க அறிவுறுத்தியுள்ளது.
லக்னௌ- தில்லி தேஜா எக்ஸ்பிரஸ் ரயிலின் மூலதனம் ரூ.54 கோடியுடன், ரூ.6 கோடி சேர்த்து, ரூ.60 கோடிக்கு தனியாரிடம் கொடுக்க உள்ளனர். தமிழகத்தில் சென்னை–- மதுரை தேஜஸ் விரைவு ரயில், சென்னை - கோவை விரைவு ரயில் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த 2 ரயில்களும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால், அவர்கள் நிர்ணயிக்கும் கூடுதல் கட்டணமே வசூலிக்கப்படும். மேலும் பயணக் கட்டணத்துக்கு மத்திய அரசு வழங்கும் 47 சதவிகித மானியமும் நிறுத்தப்படும். அதனால் கட்டணம் பல மடங்கு உயரும். நடுத்தர, அடித்தட்டு மக்கள் ரயிலில் செல்லும் நிலைமை மாறி, பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுவர்.
சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலை காமராஜர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது.
இங்கு தயாரிக்கப்படும் தரம் வாய்ந்த ரயில் பெட்டிகள் வெளிநாடுகளுக்கு அனுப்புவது மட்டுமல்லாமல், தொழிற்சாலை நல்ல லாபத்திலும் இயங்கி வருகிறது. இதனுடன் ரேபரேலியில் உள்ள தொழிற்சாலையையும் தனியாருக்கு விட, மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறியிருப்பது வருத்தமளிக்கிறது.
நெய்வேலி என்.எல்.சி., சேலம் உருக்காலையைத் தனியாருக்கு தாரை வார்க்க முயற்சித்ததைப் போல தற்போது, ரயில்களையும், ஐ.சி.எப். உள்ளிட்ட ரயில்வே பணிமனைகளையும் தனியாருக்குத் தாரை வார்க்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
என்.எல்.சி, சேலம் உருக்காலையைத் தனியார் மயமாக்க முயற்சித்த போது மக்களோடு, மாநில அரசும் இணைந்து தடுத்து நிறுத்தியது போல, கோடிக்கணக்கான ரயில்வே பயணிகளின் கட்டணச்சுமையை அதிகரிக்கும் விரைவு (எக்ஸ்பிரஸ்)ரயில்களின் தனியார்மய முயற்சியையும், பல்லாயிரக்கணக்கானோரின் வேலைவாய்ப்பு பறிபோகாத வகையில் ஐ.சி.எப். நிறுவனத்தை பாதுகாக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுதொடர்பாக ரயில்வே தொழிலாளர்களோடு இணைந்து போராட பொதுமக்களும், அனைத்து அரசியல் கட்சிகள், மாநில அரசும் ஒன்றுபட வேண்டும்.
இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பொதுமக்களை நேரடியாக சந்தித்து ரயில்வே துறையைத் தனியார் மயமாக்கினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்க உள்ளோம். இப்போராட்டம் அரசியல் சார்ந்தது இல்லை என்றார் அவர்.