
தமிழகத்தில் கடந்த 12 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை 76-இல் இருந்து 264-ஆக மூன்று மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
உலக அளவில் தென்சீனப் புலி, மலேசியன் புலி, இந்தோ-சீனப் புலி, சைபீரியன் புலி, வங்கப் புலி, சுமித்ரன் புலி, காஸ்பியன் புலி, ஜவான் புலி, பாலி புலி என 9 வகையான புலிகள் உள்ளன.
கடந்த 20-ஆம் நூற்றாண்டில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட புலிகள் இருந்த நிலையில், வேட்டை, வனப் பகுதிகள் அழிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கடந்த 2000-ஆம் ஆண்டில் புலிகளின் எண்ணிக்கை 3 ஆயிரமாக சரிந்தது. இதில், குறிப்பாக ஜவான், காஸ்பியன் ஆகிய புலி வகைகள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன. தென் சீனப் புலி வகையை பல ஆண்டுகளாகப் பார்க்க முடியாத காரணத்தால், அழியும் நிலையில் உள்ள விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 வகை புலிகளைக் காக்கும் வகையில், கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் உலக புலிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்தியா முன்னிலை: இந்தியாவில் புலிகளைக் காக்கும் வகையில், கடந்த 1972-இல் புலிகள் திட்டம் தொடங்கப்பட்டது. புலிகள் வசிக்கும் பகுதி புலிகள் காப்பகங்களாக மாற்றப்பட்டு, இந்தியாவில் தற்போது 50 புலிகள் காப்பகங்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட சர்வதேச புலிகள் கணக்கெடுப்பில் 3,890 புலிகள் இருந்தது தெரியவந்தது. அதில், 2,226 புலிகள் அதாவது 60 சதவீதத்துக்கும் மேலான புலிகள் இந்தியாவில் இருப்பது தெரியவந்தது.
புலிகளின் நிலையை அறிந்து கொள்ளும் வகையில், புலிகளின் எண்ணிக்கை குறித்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடு தழுவிய கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த 2006-இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 1,411 புலிகளும், 2010-இல் 1,706 புலிகளும், 2014-இல் 2,226 புலிகளும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, 2018-இல் 20 மாநிலங்களில் 38,1400 ச.கி.மீ.பரப்பளவில் புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வனத் துறை ஊழியர்கள், வன ஆர்வலர்கள், வன ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். 26,838 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு, 3 கோடிக்கும் மேற்பட்ட வன விலங்குகளின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. அதில், 76,651 புலிகளின் புகைப்படங்களாகும். இந்தப் புகைப்படங்கள், புலிகளின் எச்சம், கால் தடம் உள்ளிட்ட பல தரவுகளின் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், இந்திய அளவில் கடந்த 2014-ஆம் ஆண்டைக் காட்டிலும் புலிகளின் எண்ணிக்கை 33 சதவீதம் அதிகரித்து, 2,967 புலிகள் இருப்பது தெரியவந்துள்ளது.
மூன்று மடங்கு உயர்வு: தமிழகத்தில் ஆனைமலை, களக்காடு முண்டந்துறை, முதுமலை, சத்தியமங்கலம் ஆகிய 4 புலிகள் காப்பகங்கள் மற்றும் பல்வேறு வனக் கோட்டங்களில் கடந்த 2006-இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் புலிகளின் எண்ணிக்கை 76-ஆக இருந்தது. வனத் துறையின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, 2010-இல் 163-ஆகவும், 2014-இல் 229-ஆகவும் உயர்ந்தது. அதுவே, 2018-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 35 புலிகள் அதிகரித்து 264 புலிகள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், புலிகள் பாதுகாப்பில் சிறந்த மேலாண்மைக்கான விருதை சத்தியமங்கலம் புலிகள் காப்பகமும், சிறந்த பராமரிப்புக்கான தரவரிசையில் ஆனைமலை புலிகள் காப்பகம் 89 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்தையும்பிடித்துள்ளது.