
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டம்.
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 187-ஆவது வைகுண்டர் ஆண்டு ஆடித் திருவிழா கடந்த 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் புஷ்ப வாகனம், தொட்டில் வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், காளை வாகனம் என பல்வேறு வாகனங்களில் அய்யா வைகுண்டர் எழுந்தருளினார்.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை 6 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடையாகி புஷ்ப வாகனத்தில் அய்யா பவனி வந்தார். பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடைக்கு பின்னர் மதியம் 1.20 மணிக்கு அய்யா வைகுண்டர் தேரில் எழுந்தருளி அவதாரபதியை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது அய்யா வைகுண்டருக்கு திரளான பக்தர்கள் சுருள் வைத்து வழிபட்டனர். தேரோட்டத்துக்குப் பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை நடைபெற்றது.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன், அய்யாவழி அருள் இசை பாடகர் ஸ்ரீ குரு சிவச்சந்திரன், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தக்கார் பிரதிநிதி பாலசுப்பிரமணிய ஆதித்தன், அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் தர்மர், துணைத் தலைவர் தோப்புமணி, செயலர் பொன்னுதுரை, பொருளாளர் ராமையா, சட்ட ஆலோசகர் சு.கு.சந்திரசேகரன், நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆ.பாரத் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.