
தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வந்த எம்.வி. கமேக்ஸ் எம்பிரர் என்ற பெரியவகை கப்பல்.
தூத்துக்குடி வஉசி துறைமுகம் கடந்த 27-ஆம் தேதி ஒரே நாளில் 1,80,597 மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது.
இந்தத் துறைமுகத்தில், முக்கியமாக நிலக்கரி (79,230 டன்கள்), சரக்குப் பெட்டக சரக்குகள் (52,200 டன்கள்), மற்ற சரக்குகள் (49,167 டன்கள்) கையாளப்பட்டன. இதற்கு முன்பு, கடந்த 2017, நவம்பர் 16 ஆம் தேதி ஒரே நாளில் 1,77,639 மெட்ரிக் டன் சரக்கு கையாண்டதே சாதனையாக இருந்தது.
மேலும், கடந்த 25-ஆம் தேதி 85,224 மெட்ரிக் டன் சரக்குகளுடன் கூடிய பெரிய கப்பல் வந்தது. சைப்ரஸ் நாட்டு கொடியுடன் எம்.வி. கமேக்ஸ் எம்பிரர் என்ற இந்தக் கப்பல் 229.50 மீட்டர் நீளமும், 36.92 மீட்டர் அகலமும், 14.20 மீட்டர் மிதவை ஆழமும் கொண்டது.
அரபு நாட்டில் உள்ள மினாசகர் என்ற துறைமுகத்தில் இருந்து 85,224 டன் சுண்ணாம்புக்கல்லை சென்னையின் கிழக்கு வர்த்தக நிறுவனத்துக்காக எடுத்து வந்துள்ளது.
சாதனை படைக்கக் காரணமாக இருந்த அதிகாரிகள், கப்பல் முகவர்கள், ஊழியர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவிப்பதாக துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் தா.கீ. ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.