
சண்டைப் பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் தலைவராக உள்ள தயாரிப்பாளர் சங்கத்தின் பெயரையும், அந்தச் சங்கத்தின் பெயரில் பணம் வசூலிக்கவும் இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாக்குவார் தங்கம் தாக்கல் செய்த மனுவில், தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கில்டு அமைப்பின் தலைவராக இருந்து வருகிறேன். இதே பெயரில், பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட சிலர் போலியாக ஒரு சங்கத்தை தொடங்கி உள்ளனர். இவர்கள் எனது சங்கத்தின் பெயர் மற்றும் சங்கத்தின் மயில் சின்னத்தையும் தவறாகப் பயன்படுத்தி, பலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். எங்களது சங்கம், சங்கங்களின் பதிவாளரிடம் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, எனது சங்கத்தின் பெயரைப் பயன்படுத்தி உறுப்பினர்களிடம் பணம் வசூலிப்பதை தடுக்கவும், வடபழனியில் உள்ள யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் உள்ள கணக்கின் மூலம் பணம் வசூலிக்கவும் தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் ஆர்.மகேஸ்வரி ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் கில்டு அமைப்பின் பெயரைப் பயன்படுத்தவும், வடபழனியில் உள்ள யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கு மூலம் பணம் வசூலிக்கவும் இடைக்காலத் தடை விதித்தார். மேலும், இந்த மனு தொடர்பாக பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர், வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.