
சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஐசரி கணேஷ் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் சென்னையில் கடந்த ஜூன் 23-ஆம் தேதி நடந்தது. இந்தத் தேர்தலுக்கு போலீஸ் பாதுகாப்பு கோரி நடிகர் விஷால் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விடுமுறை நாளில் அவசர வழக்காக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வீட்டில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரிப்பதற்கு முன், நீதிபதியைத் தொடர்பு கொண்ட அனந்தராமன் என்பவர், இந்தத் தேர்தலில் பொதுச் செயலர் பதவிக்குப் போட்டியிடும் ஐசரி கணேஷ் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டாம் எனவும், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தால், தேர்தல் தள்ளிப்போகும் என ஐசரி கணேஷ் விரும்புவதாக, நீதிபதியிடம் தொலைபேசி வாயிலாகத் தெரிவித்துள்ளார்.
தொலைபேசி இணைப்பை நீதிபதி துண்டித்ததால், அவரை அனந்தராமன் நேரில் சந்திக்க முயற்சித்துள்ளார். இதையடுத்து, அனந்தராமன் மற்றும் ஐசரி கணேஷ் மீது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப் பதிவு செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐசரி கணேஷ், அனந்தராமன் ஆகியோர் நேரில் ஆஜராகினர். ஐசரி கணேஷ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், நான் நீதித் துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். நீதித் துறை நிர்வாகத்தில் ஒருபோதும் தலையீடு செய்ததில்லை. நடந்த சம்பவத்துக்காக நான் பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறேன். என்னுடைய மன்னிப்பை ஏற்று இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்க வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள புறக்கணிக்கப்பட ஏழை எளிய மக்கள் மற்றும் திருநங்கைகள், ஆதரவற்ற குழந்தைகளின் நலனுக்காக உங்களைப் போன்றவர்கள் உதவி செய்ய வேண்டும் என்றனர். அதனை ஏற்றுக் கொண்ட ஐசரி கணேஷ், ஏழை எளிய மக்கள், ஆதரவற்ற குழந்தைகள், திருநங்கைகளின் நலனுக்காக ரூ.10 லட்சம் தருவதாக சம்மதித்தார்.
இந்தத் தொகையை மாநில சட்டப் பணிகள் ஆணையத்திடம் இரண்டு வார காலத்துக்குள் வழங்கவும், அந்தத் தொகையை தகுதியான பயனாளிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு முன்னதாக, ஆதரவற்ற குழந்தைகள் தொடர்பான வழக்கை நீதிபதிகள் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.