
பழனி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்லும் ரோப்காரில் திங்கள்கிழமை தொடங்கிய பராமரிப்புப் பணிகள்.
பழனியில் மலைக் கோயிலுக்கு பக்தர்கள் பயணிக்கும் ரோப்கார் சேவை ஆண்டு பராமரிப்புப் பணிக்காக திங்கள்கிழமை நிறுத்தப்பட்டு, பராமரிப்புப் பணிகள் தொடங்கப்பட்டன.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மலையேறி செல்லும் வகையில் படிகள் உள்ளன. வயதானவர்கள், குழந்தைகள் போன்றவர்களுக்கு ஏதுவாக மூன்று விஞ்சுகள் மற்றும் ரோப்காரும் இயக்கப்பட்டு வருகின்றன. இரண்டு நிமிடத்தில் பக்தர்கள் மலைக்கு செல்லும் வகையில் பயன்பாட்டில் இருந்த ரோப்கார் சேவை திங்கள்கிழமை முதல் ஆண்டு பராமரிப்புப் பணிக்காக 45 நாள்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.
ரோப்கார் பெட்டிகளைக் கழற்றி முழுமையான பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மூன்றாம் எண் விஞ்ச் திடீரென சிலமணி நேரம் பராமரிப்புப் பணிக்காக திங்கள்கிழமை நிறுத்தப்பட்டதால் காலையில் மலைக்குச் செல்ல வந்த பக்தர்கள் விஞ்ச் நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ரோப்கார் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மூன்று விஞ்சுகளை இயக்கினால் மட்டுமே பக்தர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியும். ஆகையால் ரோப்காரின் ஆண்டு பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மூன்று விஞ்சுகளையும் இயக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.