
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற புதிய கல்விக் கொள்கை பற்றிய கருத்தரங்கில் திறந்தநிலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் கே.பார்த்தசாரதி,
புதிய கல்விக் கொள்கை வரைவை மத்திய அரசு இறுதி செய்வதற்கு முன்பாக, அனைத்து மாநிலங்கள், கல்வியாளர்கள், துணைவேந்தர்களின் கருத்துகளை முழுமையாகக் கேட்க வேண்டும் என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டி.எஸ்.என்.சாஸ்திரி வலியுறுத்தினார்.
தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019 குறித்த கருத்தரங்கம் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கின் தொடக்க நிகழ்ச்சியில் துணைவேந்தர் சாஸ்திரி பேசியது:-
அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதி நிலை அறிக்கையில் கல்வித் துறைக்கென ரூ. 93,847.64 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதில் உயர்கல்வித் துறைக்கென ரூ.37,461 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. அதிலும், ரூ. 6,000 கோடி மத்திய பல்கலைக்கழகங்களுக்கும், மேலும் ரூ. 6,000 கோடி ஐஐடி-க்களுக்கும் ஒதுக்கப்பட்டு விட்டது. ஆனால், பிற தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள், திறந்தநிலை பல்கலைக்கழகங்கள், மாநில பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடப்படவில்லை.
பல மாநில பல்கலைக்கழகங்கள் அரசுகளின் நிதியுதவி இன்றி, கடும் நிதி நெருக்கடிக்கிடையே இயங்கி வருகின்றன. அவை அனைத்தும், அந்தப் பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் தொலைநிலைக் கல்வி நிறுவனத்திலிருந்து கிடைக்கும் வருவாயைக் கொண்டுதான் ஊழியர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட செலவினங்களைச் சமாளித்து வருகின்றன.
இவ்வாறு வருவாய்க்காக மட்டுமே தொலைநிலைக் கல்வி நடத்தப்படுவதால், தரம் கேள்விக்குறியாகி விடுகிறது. இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளை உயர்கல்வித் துறை சந்தித்து வருகிறது.
இந்தச் சூழலில்தான், புதிய கல்விக் கொள்கை வரைவை மத்திய அரசு அறிமுகம் செய்திருக்கிறது. இந்த வரைவில் பல்வேறு வரவேற்கத்தக்க விஷயங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
ஆனால், இந்த வரைவின் மீது முழுமையான கருத்துகள், ஆலோசனைகள் கேட்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. இரு தினங்களுக்கு முன்பு இந்த வரைவு மீதான ஆலோசனைக் கூட்டத்தை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நடத்தியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு ஒரு நாள் முன்புதான் துணைவேந்தர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனால், ஆலோசனைக் கூட்டத்தில் பலர் பங்கேற்க முடியாத நிலை உருவானது. அதோடு, மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த கல்விக் கொள்கை மீது எப்படி ஒரு நாளில் ஆலோசனை நடத்தி முடித்துவிட முடியும் என்ற கேள்வியும் எழுகிறது.
மேலும், இந்த வரைவு குறித்து ஆன்-லைனில் கருத்து தெரிவிக்கவும் மிகக் குறைந்த அளவு கால அவகாசமே கொடுக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் இருப்பவர்களும், இணையதள வசதி இல்லாதவர்களும் எப்படி விரைந்து கருத்துகளைத் தெரிவிக்க முடியும்.
இது சரியான அணுகுமுறையாக இருக்க முடியாது. கூட்டாட்சி நடைமுறையில், மாநிலங்களின் கருத்துகளுக்கும்
முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். எனவே, தேசிய கல்விக் கொள்கை வரைவு மீது கருத்து தெரிவிக்க மேலும் கூடுதல் கால அவகாசம் அளித்து, மாநிலங்களின் கருத்துகளையும், கல்வியாளர்கள், அனைத்து பல்கலைக்கழகங்களின் கருத்துகளை முழுமையாகக் கேட்டு, அதற்கேற்றபடி மாற்றங்களை மேற்கொண்டு வரைவை இறுதி செய்யவேண்டும்.
அவ்வாறு கருத்துகள் முழுமையாக கேட்கப்படாமல், வரைவு இறுதிப்படுத்தப்பட்டால் அது வெறும் கொள்கையாக மட்டுமே இருக்கும். அதனால், மாற்றமும் ஏற்பட்டுவிடாது.
பல்கலைக்கழகங்களுக்குள் புரிந்துணர்வு வேண்டும்: பல்கலைக்கழகங்கள் அனைத்துத் திட்டங்களுக்கும் அரசை எதிர்பார்க்காமல், தங்களுக்குள் புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொண்டு திட்டங்களை வகுக்க வேண்டும். அதாவது தமிழகத்தில் உள்ள சட்டப் பல்கலைக்கழகம், மருத்துவப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி,
திறந்தநிலைப் பல்கலைக்கழகம், வேளாண் பல்கலைக்கழகம் என அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்களும் ஆலோசனை மேற்கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் புதிய கல்வித் திட்டங்கள், படிப்புகளை அறிமுகம் செய்வது, அதற்கான நிதியை பகிர்ந்துகொள்வது போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் துணைவேந்தர் சாஸ்திரி கூறினார்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுதா சேஷய்யன்: உயர் கல்வித் துறையில் திறந்தநிலை கல்வி முறை மிகப் பெரிய பங்காற்றி வருகிறது. கலை-அறிவியல் படிப்புகளில் மட்டுமின்றி, அடிப்படை மருத்துவம், முதுநிலை மருத்துவ பட்டயப் படிப்புகள் என பல்வேறு துறைகளிலும் திறந்தநிலை கல்வி முறை பெரும் பங்காற்றி வருகிறது. எனவே, திறந்தநிலைக் கல்வி முறையை தவிர்த்துவிட முடியாது.
ஆனால், இந்த திறந்தநிலைக் கல்வி முறையில் பல்வேறு மேம்பாடுகள் செய்யப்பட வேண்டியுள்ளது. குறிப்பாக, திறந்தநிலை கல்வி முறை எப்போதுமே உயர்கல்வித் துறையில் இரண்டாம் பட்சமாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலை மாற்றப்படவேண்டும். மேலும், கல்வித் தரத்தை மேம்படுத்துவது, மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு எளிதில் தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை மேம்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது. இதுபோன்ற பல்வேறு அம்சங்கள் இந்தக் கருத்தரங்களில் ஆலோசிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.