
தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை திங்கள்கிழமை சந்தித்து மனு அளித்த விசிக எம்.பி.க்கள் தொல். திருமாவளவன், து. ரவிக்குமார், பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை விவகாரம் தொடர்பாக தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. உள்ளிட்டோர் திங்கள்கிழமை நேரில் சந்தித்தனர். அவர்களுடன் பேரறிவாளனின் தாயாரும் உடனிருந்தார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்பட 7 பேர் கடந்த 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதலுக்காக தமிழக ஆளுநருக்கு பரிந்துரைத்திருந்தது. அதன் மீது ஆளுநர் இன்னும் முடிவெடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் விசிக எம்.பி.க்கள் தொல். திருமாவளவன், து.ரவிக்குமார் மற்றும் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் ஆகியோர் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
இச்சந்திப்பு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் தொல். திருமாவளவன் கூறியதாவது:
10 மாதங்களுக்கு மேலாகியும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தோம். ஆளுநரிடம் நிலுவையிலுள்ள மனு மீது நடவடிக்கை எடுக்க உரிய வழிகாட்டுதலைத் தருமாறு வேண்டுகோள் விடுத்தோம். பேரறிவாளனின் தாய் அற்புதம்மாளும் அமித் ஷாவிடம் இதே கோரிக்கையை வலியுறுத்தினார். இவர்களை விடுவிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அளித்த வழிகாட்டுதல் உள்ளிட்ட விவரங்களை அமைச்சரிடம் எடுத்துரைத்தோம். இது தொடர்பாக உரியவர்களுடன் பேசி முடிவெடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் நல்ல முடிவும், தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த சந்திப்பு ஆறுதல் அளிக்கிறது என்றார் அவர்.
பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கூறுகையில், இந்த வழக்கு தொடங்கி 29 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தக் கொலை வழக்கிற்கும் எனது மகன் பேரறிவாளனுக்கும் தொடர்பு இல்லை என்று விசாரணை அதிகாரி தியாகராஜன் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த போதே எனது மகன் விடுதலையாவார் என எதிர்பார்த்தேன். நீதிபதிகளும் இந்த வழக்கில் குளறுபடிகள் இருப்பதாகக் கூறியதால் நம்பிக்கை மேலும் அதிகரித்தது. ஆனால் விடுதலை ஆகவில்லை. தமிழக ஆளுநர் 10 மாதங்களுக்கு மேலாகியும் இந்த விவகாரத்தில் கையெழுத்திடவில்லை எனும் நிலையில்தான் மத்திய உள்துறை அமைச்சரை தொல். திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோரின் ஏற்பாட்டில் சந்தித்துள்ளேன். நம்பிக்கையின்பேரில்தான் அமைச்சரைச் சந்தித்திருக்கிறேன். அவரும் ஆலோசனை செய்து முடிவு எடுப்பதாகக் கூறியிருக்கிறார். அனைவரும் விடுதலையாக வாய்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் என்றார்.