
சென்னையில் முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக, கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சென்னை எழும்பூரில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது திங்கள்கிழமை காலை வெடிக்கும் எனவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.
இதைக் கேட்ட போலீஸார் அதிர்ச்சியடைந்து, உடனடியாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உயர் அதிகாரிகள், முதல்வர் வீட்டின் வெளிப் பகுதியில் சோதனையிட உத்தரவிட்டனர்.
இதன் அடிப்படையில் முதல்வர் வீட்டின் வெளிப் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை சுமார் ஒன்றரை மணி நேரம் சோதனை செய்தனர். ஆனால் அங்கிருந்து எந்த வெடிப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை.
கார் ஓட்டுநர் கைது: இதனால் அந்த அழைப்பு வதந்தியை பரப்பும் நோக்கத்தில் வந்திருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது. இது தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த அழைப்பு சேலையூர் பராசக்திநகர் 2-வது தெருவைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கு.வினோத்குமார் (33) என்பவரது செல்லிடப்பேசியில் இருந்து வந்திருப்பது தெரியவந்தது.
உடனே சேலையூர் காவல் ஆய்வாளர் விஜயன் தலைமையிலான போலீஸார், வினோத்குமாரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை ஒப்புக் கொண்டாராம்.
இதையடுத்து போலீஸார் வினோத்குமாரை கைது செய்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், வினோத்குமார் தனது மனைவியை காணவில்லை என புகார் செய்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்காததினால், கோபத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளாராம்.