
சென்னையில் அதிமுக முன்னாள் எம்.பி.,யின் மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 மாதங்களாக தலைமறைவாக இருந்த அவரது மகன் தில்லியில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சென்னை பெசன்ட் நகர் 6-ஆவது அவென்யுவைச் சேர்ந்தவர் ரத்தினம். மறைந்த முன்னாள் அதிமுக எம்.பி., குழந்தைவேலுவின் மனைவியான அவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். லண்டனில் படித்து வந்த ரத்தினத்தின் மகன் பிரவீன் (35) கடந்த மார்ச் மாதம் சென்னை வந்தார். ரத்தினத்துக்கும், பிரவீனுக்கும் இடையே சொத்துத் தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி ரத்தினம் அவருடைய வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
இது தொடர்பாக சாஸ்திரி நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் துப்பு துலக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், சொத்துப் பிரச்னையின் காரணமாக பிரவீன், சம்பவத்தன்று தாய் ரத்தினத்திடம் தகராறு செய்ததும், தகராறு முற்றவே அவர் ரத்தினத்தை கொலை செய்துவிட்டு தப்பியோடியிருப்பதும் தெரியவந்தது.
3 மாதங்கள் தலைமறைவு: பிரவீன் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க, அவரது பாஸ்போர்டை போலீஸார் முடக்கினர். மேலும் அவரை தீவிரமாகத் தேடி வந்தனர். ஆனால் 3 மாதங்களாக பிரவீன் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் தில்லியில் பதுங்கியிருந்த பிரவீனை சென்னை தனிப்படை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். அவரிடம் போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.