
பொதுக் கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.
அணைக்கட்டு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மேல்அரசம்பட்டில் தடுப்பணை கட்டப்படும் என துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திங்கள்கிழமை தெரிவித்தார்.
அணைக்கட்டு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஒடுக்கத்தூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து அவர் பேசியது:
தமிழக அரசின் மொத்த ஆண்டு வருவாய் ரூ. 1 லட்சம் கோடி. அதில் ரூ. 34 ஆயிரம் கோடி நிதி கல்விக்காக ஒதுக்கப்பட்டு, 14 வகையான கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. ரூ. 12 ஆயிரம் மதிப்பிலான மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. உயர்கல்வி வரை இலவசக் கல்வி வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே கல்வியில் தமிழகம் 2-ஆம் இடம் பிடித்து முன்னேறியுள்ளது.
மக்கள் நல்வாழ்வுத் திட்டம் மூலம் மக்களுக்கு மருத்துவ வசதி வழங்கப்படுகிறது. மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனர். பெண்களுக்கு அதிக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது.
100 நாள் வேலைத் திட்டத்தை நிறுத்திவிடுவார்கள் என மு.க.ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்து வருகிறார். வறட்சியால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் 150 நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எந்த காலத்திலும் இத்திட்டம் நிறுத்தப்படமாட்டாது. 60 லட்சம் ஏழை, எளிய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். ஸ்டாலின் நீதிமன்றத்தில் அதற்கு தடை பெற்றார். தேர்தலுக்கு பிறகு உறுதியாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
காவிரி நதிநீர் பிரச்னை வழக்கில் நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. மத்திய அரசு அரசாணை வெளியிட வேண்டும். ஆனால் அப்போது திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோதும் அரசாணை வெளியாகவில்லை. அதனை உச்சநீதிமன்றத்திற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு சென்றார். அதன் பிறகு தான் மத்திய அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரில் தமிழர்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். அப்போது மத்தியில், மாநிலத்தில் ஆட்சியில் இருந்தது திமுக, காங்கிரஸ் அரசுகள் தான்.
வேலூர் மக்களவைத் தேர்தலில் நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும். அணைக்கட்டு சட்டப்பேரவை தொகுதியில் ஒரு அணை கூட இல்லையென்ற குறை உள்ளது. அணைக்கட்டு தொகுதியில் உத்தரகாவேரி ஆற்றின் குறுக்கே மேல்அரசம்பட்டில் அணை கட்ட கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒடுக்கத்தூர் பேருந்து நிலையம் ரூ. 40 லட்சம் செலவில் நவீனமாக கட்டித் தரப்படும். உத்தரகாவேரி ஆற்றின் தென் கரையில் மயானத்துக்குச் செல்ல ரூ. 50 லட்சம் செலவில் 1 கி.மீ. தூரம் தார்ச் சாலை அமைக்கப்படும். சல்லாபுரி அம்மன் கோயில் முதல் கெங்கன்னம்பாளையம் வரையிலான சாலை ரூ.1 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும். அம்பேத்கர் நகர் வழியான சாலை ரூ. 80 லட்சம் செலவில் தரம் உயர்த்தப்படும்.
வேலூர் தேர்தலில் ஏ.சி. சண்முகத்திற்கு பெருவாரியான வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமென அவர் கூறினார்.
அமைச்சர்கள் ஓ.எஸ். மணியன், கே.சி. வீரமணி, வேட்பாளர் ஏ.சி. சண்முகம், முன்னாள் அமைச்சர்கள் வைகைச்செல்வன், மோகன், வேலூர் ஆவின் தலைவர் வேலழகன், மாதனூர் ஒன்றியச் செயலர் ஜோதிராமலிங்கராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.