எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு மத்திய அரசு மதிப்பளிப்பதில்லை:  இரா.முத்தரசன்

எதிர்க் கட்சிகளின் கருத்துகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்காமல், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பயன்படுத்தி தாங்கள் விரும்பிய அனைத்து சட்டங்களையும் நிறைவேற்றி வருவதாக இந்திய
எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு மத்திய அரசு மதிப்பளிப்பதில்லை:  இரா.முத்தரசன்


எதிர்க் கட்சிகளின் கருத்துகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்காமல், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பயன்படுத்தி தாங்கள் விரும்பிய அனைத்து சட்டங்களையும் நிறைவேற்றி வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். 
இது குறித்து ஈரோட்டில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு சட்டங்கள், அறிவிப்புகளை மத்திய அரசு அறிவித்து, சட்டமாக நிறைவேற்றி வருகிறது. விவாதங்கள் இன்றி எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காமல், பெரும்பான்மையைப் பயன்படுத்தி தாங்கள் விரும்பிய அனைத்தையும் நிறைவேற்றி வருகின்றனர். தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து எவ்வித தகவலும் பெற முடியாமல் நீர்த்து போக செய்துள்ளனர். 
கடந்த 2017-2018 -ஆம் ஆண்டில் சாலை மேம்பாட்டுப் பணி, கல்வி, குடிநீர்த் திட்டப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பல ஆயிரம் கோடியை தமிழக அரசு பயன்படுத்தாமல் விட்டதால் திரும்பப் போய் விட்டது. இது கண்டிக்கத்தக்கது. வேலூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் வரும் ஆகஸ்ட் 3 -ஆம் தேதி நடைபெற உள்ளது. 
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவினரை பிரசாரத்துக்கு வர வேண்டாம் எனக் கூறுகின்றனர். இதில் இருந்தே தெரிகிறது இந்தக் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்பது. சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மக்களுடன் இணைந்து போராடி அந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்தும்.
ஹைட்ரோ கார்பன், தேசிய கல்விக்கொள்கை, 10 சதவீத இட ஒதுக்கீடு கொள்கைகளில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது. மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு எப்படியாவது ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் தமிழக ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.
பேட்டியின் போது திருப்பூர் எம்பி கே.சுப்பராயன், மாவட்டச் செயலாளர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com