நாடு முழுவதும் பூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும்: குமரிஅனந்தன்

நாடு முழுவதும் மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவருமான குமரிஅனந்தன் வலியுறுத்தியுள்ளார். 
நாடு முழுவதும் பூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும்: குமரிஅனந்தன்


நாடு முழுவதும் மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவருமான குமரிஅனந்தன் வலியுறுத்தியுள்ளார். 
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்திய முதல்வர்களின் பிறந்த இடங்களுக்கு நேரில் சென்று, அவர்களின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தி வரும் குமரி அனந்தன், சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த ராஜபாளையத்தைச் சேர்ந்த பி.எஸ். குமாரசாமி ராஜா நினைவிடத்தில்  திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: அக்டோபர் 2 -ஆம் தேதி காந்தியடிகளின் 150 -ஆவது பிறந்த நாளின் நிறைவு நாள் வருகிறது. அதற்கு முன்னரே, நாடு முழுவதும் மதுவிலக்கு கொண்டு வரவேண்டும். மது இல்லாத இந்தியாவில்தான் காந்தியடிகளின் 150 -ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட  வேண்டும்.       காந்தியடிகளின் சிந்தனையைத் தூண்டவும், ஏற்கெனவே தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்திய ஓமந்தூரார், பி. எஸ். குமாரசாமி ராஜா, ராஜகோபாலாச்சாரியார், பக்தவச்சலம், அறிஞர் அண்ணா ஆகியோரின் உறுதி, தற்போதைய முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கும் வரவேண்டும் என்பதற்காக, முன்னாள் முதல்வர்கள் நினைவு இடங்களுக்குச் சென்று வணங்கி தியானம் செய்து வேண்டுகிறேன்.   பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என்றார்.  இதையடுத்து,  திருவனந்தபுரம் தெருவில் அமைந்துள்ள குமாரசாமி ராஜா சிலைக்கு மாலை அணிவித்து  ஊர்வலமாகச் சென்று, காந்தி கலை மன்றத்திலுள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர், பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது.
    கூட்டத்துக்கு, காந்தி பேரவைத் தலைவர் விவேகானந்தன் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தளவாய் பாண்டியன் முன்னிலை வகித்தார். குமரி அனந்தன் சிறப்புரையாற்றினார். நிறைவாக, காந்தி கலை மன்றப் பொறுப்பாளர் ராம்குமார் ராஜா வாழ்த்துரை வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com