பா.ஜ.க. இஸ்லாமியர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கலாமா?: கே.எஸ்.அழகிரி கேள்வி 

பெரும்பான்மை சமுதாயத்தை சிறுபான்மையினருக்கு எதிராக அணி திரட்டுகிற பா.ஜ.க. இஸ்லாமியர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கலாமா? என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
பா.ஜ.க. இஸ்லாமியர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கலாமா?: கே.எஸ்.அழகிரி கேள்வி 

சென்னை: பெரும்பான்மை சமுதாயத்தை சிறுபான்மையினருக்கு எதிராக அணி திரட்டுகிற பா.ஜ.க. இஸ்லாமியர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கலாமா? என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் புதனன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாது:

முத்தலாக் தடை மசோதா என்று அழைக்கப்படும் முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. முஸ்லிம் மதத்தில் மூன்றுமுறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்தால் அது கிரிமினல் குற்றமாகி, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை பெறுவதற்கு இச்சட்டம் வழிவகுக்கிறது. இதேபோல, விவாகரத்து செய்யப்படும் இந்து அல்லது கிறிஸ்துவப் பெண்களின் கணவர்களுக்கு சிறை தண்டனை கொடுக்காத போது, முத்தலாக் சொல்லும் ஆண்களுக்கு மட்டும் சிறை தண்டனை கொடுப்பது நியாயம் தானா என்கிற கேள்வி எழுந்துள்ளது. விவாகரத்து செய்யப்பட்ட பிறகு கணவன் சிறையில் அடைக்கப்பட்டால் மனைவியின் வாழ்வாதாரத்தை யார் பாதுகாப்பது ? இந்த கேள்விக்கு இதுவரை பா.ஜ.க. பதில் கூறவில்லை.

முத்தலாக் முறையில் விவாகரத்து செய்வது மிக அதிகமாக முஸ்லிம்களிடையே  நடைபெற்று வருவதாக பா.ஜ.க.வினர் நியாயப்படுத்தி பேசுகிறார்கள்.  மனித உரிமை கொள்கைகளுக்கு எதிராக இருப்பதாக கூறி திருமணம் மற்றும் வாரிசு உரிமைகளில் மாற்றம் கொண்டு வருவதற்கு அந்த மதத்தினரின் ஒப்புதல் இல்லாமல் செய்வது மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிரானதாகும்.

மக்களவையில் 2014 இல் 284 உறுப்பினர்களையும், 2019 இல் 303 உறுப்பினர்களையும் பெற்றிருக்கிற பா.ஜ.க.வில் ஒருவர் கூட சிறுபான்மை சமூகத்தினருக்கு பிரதிநிதித்துவம் வழங்காத நிலையில் இஸ்லாமிய பெண்களின் உரிமைகளைப் பற்றி பேசுவதற்கு பா.ஜ.க.வுக்கு என்ன அருகதை இருக்கிறது ? இந்திய மக்கள் தொகையில் 15 சதவீதம் இருக்கிற இஸ்லாமியர்களுக்கு மக்களவையில் 27 உறுப்பினர்கள் தான் இருக்கிறார்கள். சிறுபான்மை சமுதாயத்தினர் நாடாளுமன்றத்தில் நுழையக் கூடாது என்பதை பதுங்கு திட்டமாக வைத்து பெரும்பான்மை சமுதாயத்தை சிறுபான்மையினருக்கு எதிராக அணி திரட்டுகிற பா.ஜ.க. இஸ்லாமியர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கலாமா? 

அ.தி.மு.க. எப்படி இரட்டை தலைமையில் இயங்குகிறதோ, அதைப்போலவே முத்தலாக் மசோதாவிலும் இரட்டை வேடம் போட்டிருக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com