நிறைவுபெற்றது ஒட்டுமொத்த பி.இ. கலந்தாய்வு:கடந்த ஆண்டைவிட 5,000 பேர் கூடுதல் சேர்க்கை

ஒட்டுமொத்த பொறியியல் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், 82,819 இடங்கள் நிரம்பியிருக்கின்றன.
நிறைவுபெற்றது ஒட்டுமொத்த பி.இ. கலந்தாய்வு:கடந்த ஆண்டைவிட 5,000 பேர் கூடுதல் சேர்க்கை


ஒட்டுமொத்த பொறியியல் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், 82,819 இடங்கள் நிரம்பியிருக்கின்றன.
மொத்தம் 88,181 இடங்கள் சேர்க்கை இன்றி காலியாக விடப்பட்டுள்ளன. இருந்தபோதும், கடந்த ஆண்டைக் காட்டிலும் 5,819 பேர் கூடுதலாக சேர்க்கை பெற்றுள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள 479 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1.71 லட்சம் பி.இ. இடங்களுக்கான சேர்க்கையை தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் நடத்தியது.
முதலில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வும், பிளஸ்2 தொழில் பிரிவு மாணவர்களுக்கான கலந்காய்வும் நடத்தப்பட்டது. அதன் பின்னர் பொதுப் பிரிவினருக்கான 4 சுற்றுகளைக் கொண்ட ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்பட்டது. பின்னர், பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்து உடனடி சிறப்புத் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. இந்த நான்கு கட்ட கலந்தாய்வின் முடிவில் மொத்தம் 81,319 பேர் இடங்களைத் தேர்வு செய்து, பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான சேர்க்கைக் கடிதம் பெற்றுச் சென்றனர்.
இறுதியாக, பொதுப் பிரிவு கலந்தாய்வு மற்றும், துணைக் கலந்தாய்வில் பங்கேற்க முன்பணம் செலுத்திவிட்டு, பங்கேற்கத் தவறியவர்களுக்கான இறுதி சிறப்புக் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. இதில் பங்கேற்க சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் வளாகத்தில் 1500 பேர் நேரில் பதிவு செய்தனர். இவர்கள் அனைவருக்கும் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
இதுகுறித்து, தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் விவேகானந்தன் கூறியது:
கலந்தாய்வில் பங்கேற்கத் தவறியவர்களுக்காக செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட இறுதிக்கட்ட கலந்தாய்வில் பங்கேற்க 1500 பேர் பதிவுசெய்தனர். அவர்கள் அனைவருக்கும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதன்படி, 2019-20-ஆம் கல்வியாண்டு பி.இ. கலந்தாய்வு மூலம் ஒட்டுமொத்தமாக 82,819 இடங்கள் நிரம்பியிருக்கின்றன என்றார்.
கடந்த ஆண்டைவிட கூடுதல் சேர்க்கை: அதன்படி, 2019-20 கல்வியாண்டு கலந்தாய்வில் மொத்தம் இடம்பெற்றிருந்த 1.71 லட்சம் பி.இ. இடங்களில் 88,181 இடங்கள் சேர்க்கை இன்றி காலியாக விடப்பட்டுள்ளன.
இது கடந்த ஆண்டைவிட குறைவாகும். கடந்த ஆண்டு 90 ஆயிரம் இடங்கள் சேர்க்கையின்றி காலியாக விடப்பட்டிருந்தன. அதுபோல, கலந்தாய்வு மூலம் 77,000 இடங்கள் மட்டுமே நிரம்பியிருந்தன. ஆனால், இந்த ஆண்டு 5,819 இடங்களுக்கு கூடுதலாக மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com