மீட்கப்பட்ட மலைப்பாம்பு முட்டைகளிலிருந்து வெளிவந்த 4 குட்டிகள்

பாளையங்கோட்டை அருகே மீட்கப்பட்ட மலைப்பாம்பு முட்டைகளில் இருந்து 4 குட்டிகள் செவ்வாய்க்கிழமை வெளிவந்தன.
மீட்கப்பட்ட மலைப்பாம்பு முட்டைகளிலிருந்து வெளிவந்த 4 குட்டிகள்


பாளையங்கோட்டை அருகே மீட்கப்பட்ட மலைப்பாம்பு முட்டைகளில் இருந்து 4 குட்டிகள் செவ்வாய்க்கிழமை வெளிவந்தன.
பாளையங்கோட்டை  அருகே உள்ள கக்கன் நகர் கிருபா நகரைச் சேர்ந்தவர் தினேஷ். அப்பகுதியில் மீன் பண்ணை நடத்தி வருகிறார். இந்தப் பண்ணையில் கடந்த சில நாள்களாக மீன்கள் குறைந்துகொண்டே வந்தன. 
கடந்த 4 -ஆம் தேதி தினேஷ் மீன் பண்ணைக்கு சென்றபோது அங்கு மலைப்பாம்பு ஒன்று மீன்களை விழுங்குவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு அலுவலர் வீரராஜ் தலைமையிலான தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று, மலைப்பாம்பை பிடித்தனர். பாம்பு மறைந்து இருந்த புதருக்குள் இருந்த 30 முட்டைகள் மீட்கப்பட்டன.
இதனையடுத்து வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர், மலைப்பாம்பு மற்றும் 30 முட்டைகளை  கால்நடை மருத்துவ அலுவலரிடம் ஒப்படைத்தனர். மலைப்பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது. பின்னர் 30 முட்டைகளையும் வன கால்நடை மருத்துவர் சுகுமாரன், வன கால்நடை அலுவலர் ரோனால்ட் வினோத்  ஆகியோர் செயற்கையான முறையில் இலைதழைகளை வைத்து அதற்குத் தேவையான வெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப பராமரித்து வந்தனர். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை 4 முட்டையிலிருந்து மலைப்பாம்பு குட்டிகள் வெளியே வந்தன. 
இதுகுறித்து பொன்னாக்குடி வன கால்நடை  மருத்துவர் சுகுமாரன் கூறியது: இதுவரை மலைப் பாம்பு முட்டைகளை 25 நாள்கள் வரை வைத்திருந்து அடைகாத்தது இல்லை. அவ்வாறு செய்தாலும் அந்த முட்டைகள் பயனற்றுப் போனதாகவே இருந்துள்ளன. முட்டையிலிருந்து குட்டிகள் வெளி வந்தாலும் அவை இன்குபேட்டரில் வைத்து அடை காக்கப்பட்டவையாக இருந்தன. ஆனால்,  திருநெல்வேலியில் முதன்முறையாக 30-க்கும் மேற்பட்ட முட்டைகளை, அதற்குத் தேவையான வெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப இயற்கையான முறையில் பராமரித்து பாம்பு குட்டிகளை வெளியேற வைத்துள்ளோம்.  தாய் பாம்பு மணிமுத்தாறு வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது. 
அதேபோல், தற்போது வெளிவந்த முதல் நான்கு குட்டிகளும் களக்காடு தலையணை பகுதிக்கு மேல் கொண்டு விடப்படும். தொடர்ந்து வெளியே வரும் குட்டிகளும் இதைப் போல அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விடப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com