Enable Javscript for better performance
மும்மொழிக் கொள்கையை பாஜக அரசு கனவில் கூட நினைக்கக் கூடாது: ஸ்டாலின்- Dinamani

சுடச்சுட

    

    மும்மொழிக் கொள்கையை பாஜக அரசு கனவில் கூட நினைக்கக் கூடாது: ஸ்டாலின்

    By DIN  |   Published on : 01st June 2019 06:10 PM  |   அ+அ அ-   |    |  

    MK_Stalin_


    சென்னை: மும்மொழிக் கொள்கையை பாஜக அரசு கனவில் கூட நினைக்கக் கூடாது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்தி உள்ளடக்கிய மும்மொழித் திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்” என்று கஸ்தூரி ரங்கன் தலைமையிலான “புதிய கல்விக் கொள்கை” வகுக்கும் குழு அளித்துள்ள பரிந்துரைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் ஒருமைப்பாட்டையும், செம்மொழியாம் தாய்த் தமிழைச் சிறுமைப்படுத்தி ஒதுக்கவும்- மொழி  வாரி மாநிலங்களின் தேசிய உணர்வுகளில் வெந்நீர் ஊற்றும் விதத்திலும், “ப்ரீ ஸ்கூல் முதல் 12 ஆம் வகுப்பு வரை இந்தி வழிக் கல்வி” என்ற விபரீதமான நாட்டைப் பிளவுபடுத்தும்  பரிந்துரையை இந்தக் குழு அளித்திருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது.

    புதிய வரைவுக் கல்விக் கொள்கையில் மும்மொழித் திட்டத்தை பரிந்துரைத்ததோடு, “குருகுலக் கல்வி முறையைக் கொண்டு வர வேண்டும்” “சமஸ்கிருதத்தை அனைத்துப் பள்ளிகளிலும் உயர் கல்வி நிறுவனங்களிலும் பயிற்றுவிக்க வேண்டும்” “எளிய முறையில் சமஸ்கிருதம் கற்கும் நூல்களை அதிக எண்ணிக்கையில் பள்ளிகளில் இடம்பெறச் செய்ய வேண்டும்” “இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள இந்தி ஆசிரியர்களை மற்ற மாநிலங்களுக்கு அனுப்பி இந்தி கற்றுக் கொடுக்கச் சொல்ல வேண்டும்” “அதற்காக இந்தி பேசும் மாநிலங்களும், இந்தி பேசாத மாநிலங்களும் ஆசிரியர் பரிமாற்ற ஒப்பந்தம் போட்டுக் கொள்ள வேண்டும்” என்ற இந்தி பேசாத மக்களுக்குக் காலப் போக்கில் பேரபாயத்தை ஏற்படுத்தும் பரிந்துரைகள் - அந்த வரைவு அறிக்கையில் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த அளிக்கப்பட்டுள்ள மிகச் சில பரிந்துரைகளின் மீதான நம்பிக்கையையும், நல்லெண்ணத்தையும் சிதைத்து விட்டது. ஆகவே புதிய வரைவுக் கல்வி கொள்கை - 2019ன் நோக்கம் கல்வியின் தரத்தை உயர்த்துவது என்று நினைப்பதற்குப் பதில் - இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியைக்  கட்டாயமாகத் திணிக்கவும், சமஸ்கிருதத்தை வம்படியாகப் பள்ளிகளில் புகுத்தி இளைஞர்களின் மனங்களைப் பாழ்படுத்தவும்  திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட உள்நோக்கம் நிறைந்த அறிக்கையே என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

    “இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலம் நீடிக்கும்” என்று பிரதமர் பண்டித நேருவின் உறுதிமொழி இன்னும் பாராளுமன்றத்தின் பதிவேடுகளில் இருக்கிறது. இரு மொழிக் கொள்கைத் தீர்மானத்தின் மீது தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற்று “இனி பள்ளிகளில் இந்தி வேண்டாம்” என்று 50 வருடங்களுக்கு முன்பே நிறைவேற்றப்பட்டது இன்னும் சட்டமன்றப் பதிவேடுகளில் இருக்கிறது. தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது கொண்டு வரப்பட்ட “தமிழ் கட்டாயம் கற்க வேண்டும்” என்று சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மொழி பற்றிப் பரிந்துரை செய்யும் முன்பு இது போன்ற வரலாறுகளை இந்தக்குழு ஆராய்ந்ததாகவோ, அவற்றின் அடிப்படை நோக்கங்களைப் புரிந்து கொண்டதாகவோ தெரியவில்லை. 

    ஆகவே நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மும்மொழித்திட்டம் என்ற போர்வையில் இந்தியைத் திணிக்கும் திரு கஸ்தூரி ரங்கன்  கமிட்டியின் பரிந்துரையை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக நிராகரிக்க வேண்டும். இது குறித்து திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கியதுமே தங்களது வலுவான எதிர்ப்பைத் தெரிவித்து - இந்தக் கோரிக்கையைத் தீவிரமாக வலியுறுத்துவார்கள். 

    தமிழ்நாட்டில் உள்ள இருமொழிக் கொள்கை என்ற தேன்கூட்டில் கல் வீசி- தமிழ்நாட்டில் மும்மொழித் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்து விடலாம் என்று மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு - தன் கனவின் ஓரத்தில் கூட நினைத்துப் பார்க்க எத்தணிக்கக் கூடாது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp