Enable Javscript for better performance
24 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தவர் மீண்டும் குடும்பத்துடன் சேர்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    24 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தவர் மீண்டும் குடும்பத்துடன் சேர்ப்பு

    By DIN  |   Published on : 01st June 2019 02:40 AM  |   அ+அ அ-   |    |  


    இருபத்திநான்கு  ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை விட்டுப் பிரிந்த ஒடிஸா இளைஞரைக் கண்டறிந்த தமிழக காவல்துறையினர் மீண்டும் அவரைக் குடும்பத்துடன் சேர்த்து வைத்தனர்.
    இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
    தமிழக காவல்துறையின் மாநில குற்ற ஆவண காப்பக அதிகாரிகள் மாநிலம் முழுவதும் மனநல காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வில், குடும்பத்தை விட்டுப் பிரிந்து மனநலம் பாதிக்கப்பட்டு முகவரி தெரியாமலும், முகவரியைக் கூற இயலாமலும் இருப்பவர்களை அடையாளம் கண்டு, அவர்களது குடும்பத்திடம் ஒப்படைக்கும் பணியை செய்து வருகின்றனர்.
    இந்நிலையில் மாநில குற்ற ஆவண அதிகாரிகள், அண்மையில் பெரம்பலூர் வேலா கருணை இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒடிஸாவைச் சேர்ந்த ராஜ்குமார் மலீக் என்கிற புல்லு மனநலம் பாதிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளாக அங்கு சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது. சிகிச்சையில், ராஜ்குமார் சிறிது குணமடைந்துள்ளார்.
    இதையடுத்து ராஜ்குமார் கூறிய தகவல் மூலம் போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் ஒடிஸா மாநிலம் பால்சூர் மாவட்டத்தில் உள்ள சோரா பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தமிழக போலீஸார், சோரா காவல் நிலையத்துக்கு ராஜ்குமார் குறித்த தகவலை அனுப்பினர். இரண்டு மாத தீவிர தேடுதலுக்கு பின்னர், அந்தப் பகுதியில் ராஜ்குமாரின் சகோதரி, அவரது கணவர் ராஜா காந்த மலீக் ஆகியோரை போலீஸார் கண்டறிந்தனர். பின்னர் அவர்களிடம் ராஜ்குமார் மீட்கப்பட்டிருப்பது குறித்து தகவலை தெரிவித்து, சென்னைக்கு அழைத்து வந்தனர்.
    அவர்களிடம் விசாரித்ததில், கடந்த 1995-ஆம் ஆண்டு ராஜ்குமார் பத்தாம் வகுப்பு படிக்கும்போது அவரது தாய் இறந்ததால் மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.
    நெகிழ்ச்சியடைந்த குடும்பம்: இந்நிலையில் 24 ஆண்டுகளுக்குப் பின்னர் ராஜ்குமாரை சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மாநில குற்ற ஆவண காப்பகத்தில் வைத்துப் பார்த்த அவரது குடும்பத்தினர் ஆனந்த கண்ணீர் விட்டனர். மேலும் மிகவும் நெகிழ்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் அவர்கள் போலீஸாருக்கு நன்றி தெரிவித்தனர்.
    700 பேர் மீட்பு: கடந்த இரண்டு ஆண்டுகளில் குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்களும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் கண்டறியப்பட்ட சுமார் 700 பேரும் குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளதாக மாநில குற்ற ஆவணக் காப்பகம்  அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் வெளி மாநிலத்தவர் மட்டும் 200 பேர் குடும்பத்தோடு சேர்த்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp