தாவரவியல் பூங்காவுக்கு இரு மாதங்களில் 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை

உதகையில் கோடை சீசன் காலமான ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் உதகை அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு மட்டும் சுமார் 10.50 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
தாவரவியல் பூங்காவுக்கு இரு மாதங்களில் 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை

உதகையில் கோடை சீசன் காலமான ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் உதகை அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு மட்டும் சுமார் 10.50 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது இப்பூங்கா தொடங்கப்பட்டதிலிருந்து முதல் சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.
 உதகையில் கோடை சீசன் காலங்களான ஏப்ரல், மே மாதங்களில் தமிழகத்திலிருந்து மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
 உதகையில் நிலவும் இதமான காலநிலைக்காக மட்டுமின்றி, இங்கு பூத்துக் குலுங்கும் பல வண்ணங்களிலான அழகிய மலர்களை ரசிப்பதற்காகவும் இங்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.
 உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் மனதில் முதலிடத்தில் இருப்பது உதகை அரசினர் தாவரவியல் பூங்காவாகும். அதிலும் இப்பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதத்தில் நடைபெறும் மலர்க் கண்காட்சியைக் காண பெரும்பாலானோர் தவறுவதில்லை.
 இவர்களுக்காகவே பல்வேறு வெளிநாடுகளிலிருந்து ஏராளமான மலர் ரகங்கள் இறக்குமதி செய்யப்படுவதோடு, பூங்காவிலேயே விதைப் பெருக்கத்தின் மூலமும் உருவாக்கப்படும் மலர் நாற்றுகள் பூங்காவிலுள்ள மலர்ப் பாத்திகளில் நடவு செய்யப்படுவதோடு சுமார் 30,000 மலர்த் தொட்டிகளில் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு காட்சி மாடங்களிலும் வைக்கப்படுகின்றன.
 வழக்கமாக உதகையின் முக்கிய சீசன் காலமான ஏப்ரல் முதல் ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழைக் காலம் தொடங்கும் வரையிலும், இரண்டாவது சீசன் எனப்படும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களிலும் காட்சிக்கு வைக்கப்படும். மற்ற மாதங்களில் அப்போது நிலவும் பருவநிலைக்கேற்ற மலர்கள் மட்டுமே பூங்காவில் இருக்கும்.
 இந்நிலையில் அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மலர்கள் இல்லாத மாதங்களில் வந்தாலும் அப்போதும் பூங்காவில் மலர்கள் இருக்க வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், தோட்டக் கலைத் துறையினரின் புதிய முடிவின்படி பூங்காவிலுள்ள காட்சி மாடங்களில் ஆண்டு முழுவதும் மலர்த் தொட்டிகளில் மலர்கள் இருக்கும் வகையில் நடப்பு ஆண்டிலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 இதுதொடர்பாக தோட்டக் கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் கூறியதாவது:
 உதகையில் அரசினர் தாவரவியல் பூங்காவில் மலர்க் கண்காட்சிக்காக ஜனவரி மாதத்திலிருந்தே உழைத்து சுமார் 30,000 மலர்த் தொட்டிகளில் மலர்ச் செடிகள் வளர்க்கப்படுகின்றன.
 ஜூன் மாதத்தில் இவை மாற்றப்பட்டு புதிதாக மலர் நாற்றுகளை அடுத்த ஆண்டுக்காக உருவாக்குவதற்கு பதிலாக சுமார் 15,000 மலர்த் தொட்டிகளில் ஆண்டு முழுவதும் மலர்கள் இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டு காட்சி மாடங்களில் அடுக்கப்படும்.
 இதன் மூலம் பூங்காவிலுள்ள மலர் பாத்திகளில் மலர்களே இல்லாத நிலை ஏற்படும்போதும் மலர்த் தொட்டிகளில் இருக்கும் மலர்கள் சுற்றுலாப் பயணிகளை கவரும் அம்சமாக இருக்கும். அதனால், உதகையில் கோடை சீசன் முடிவடைந்திருந்தாலும் பூங்காவிலுள்ள மலர்த் தொட்டிகளில் உள்ள மலர்ச் செடிகள் அகற்றப்படாமல் காட்சி மாடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
 நடப்பு ஆண்டின் கோடை சீசனில் மக்களவைத் தேர்தல், ரம்ஜான் நோன்புக்காலம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் தாண்டி ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்களில் மட்டும் சுமார் 10 லட்சத்து 50,000 சுற்றுலாப் பயணிகள் நுழைவுக் கட்டணம் செலுத்தி பூங்காவைப் பார்வையிட்டுள்ளனர்.
 இது முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கை என்பதோடு, இது ஒரு புதிய சாதனையாகும் என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com