கிராமிய அஞ்சலகங்களில் இணைய வழி சேவையில் சிக்கல்! பரிதவிக்கும் ஊழியர்கள்

தமிழகத்தில் கிராமிய அஞ்சலகங்களில் தபால் சேவையை மேம்படுத்த வழங்கப்பட்ட மின்னணு சாதனங்களுக்கு விரைவான இணையவழி தொடர்பு கிடைக்காததால், அவற்றை பயன்படுத்த முடியாமல்
கிராமிய அஞ்சலகங்களில் இணைய வழி சேவையில் சிக்கல்! பரிதவிக்கும் ஊழியர்கள்

விழுப்புரம்: தமிழகத்தில் கிராமிய அஞ்சலகங்களில் தபால் சேவையை மேம்படுத்த வழங்கப்பட்ட மின்னணு சாதனங்களுக்கு விரைவான இணையவழி தொடர்பு கிடைக்காததால், அவற்றை பயன்படுத்த முடியாமல் பணி நெருக்கடிக்கு ஆளாவதாக அஞ்சலக ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
 நாட்டின் பழம்பெரும் மத்திய அரசுத் துறையான தபால் துறை, தபால் சேவை மட்டுமல்லாது பல்வேறு சேவைகளை ஆற்றி வருகிறது. கிராமப்புறங்களில் 80 சதவீதம் அஞ்சலகங்கள் மூலம் இன்றளவும் சேவைப் பணிகள் தொடர்கின்றன.
 நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, நகர்ப்புற அஞ்சலகங்கள், நேரடியாக இணையவழியில் கணினி மூலம் மேம்படுத்தப்பட்ட சேவையை வழங்கி வருகின்றன. அதேபோல, கிராமிய கிளை அஞ்சலகங்களையும் மேம்படுத்தும் பொருட்டு, இணைய வழி சேவை தொடங்கப்பட்டது. கிராமிய தகவல் மேம்பாட்டு தொழில் நுட்பத்துடன் (ஆர்.ஐ.சி.டி.) கூடிய தர்பான் திட்டத்தின் (டிஜிட்டல் அட்வான்ஸ்டு ஆப் ரூரல் போஸ்ட் ஆபீஸ்) கீழ் அனைத்து கிராமிய அஞ்சலகங்களுக்கும் இணையவழியில் இயங்கும் கையடக்க மின்னணு சாதனம் (மொபைல் டிவைஸ்) கடந்தாண்டு முதல் வழங்கப்பட்டது.
 இந்தத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள 1.54 லட்சம் கிராமிய அஞ்சலகங்கள் வரை இணைக்கப்பட்டு, இணைய வழி சேவை வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும், கடந்தாண்டில் அனைத்து கிராமிய அஞ்சலகங்களுக்கும் இத்தகைய கையடக்க மின்னணு சாதனங்கள் வழங்கப்பட்டு, கிராமிய அஞ்சலக அதிகாரிகள் மூலம் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 தபால் சேவை, மணியார்டர்கள், சேமிப்புத் திட்டங்கள், நிரந்தர வைப்புத் திட்டங்கள் போன்றவை குறித்த விவரங்கள் புத்தகங்களில் ஊழியர்கள் கையால் எழுதி பராமரித்து வந்த நிலையில், இந்த நீண்டகால எழுத்து முறைக்கு விடைகொடுக்கும் விதமாக, மின்னணு சாதனம் கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
 புதுவை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கடந்த அக்டோபர் மாதங்களில் அனைத்து கிராமிய அஞ்சலகங்களுக்கும் இந்த மின்னணு சாதனங்கள் வழங்கப்பட்டு, அதன் சேவை வரவேற்பைப் பெற்றது. இந்த சாதனங்கள் வழங்கப்பட்டவுடன் தபால் சேவைப் பணிகள் மேலும் விரைவாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இணையவழி தொடர்பு குறைபாடு காரணமாக, பெரும் பணி நெருக்கடியை சந்தித்து வருவதாக அஞ்சலக ஊழியர்கள் தற்போது வேதனை தெரிவிக்கின்றனர்.
 இயங்காத மின்னணு சாதனம்: இந்த மின்னணு சாதனத்தின் குறைகளைக் கண்டித்து, புதுவை கோட்ட தபால் அஞ்சலகம் முன் புதுவை, விழுப்புரம் மாவட்ட தபால் ஊழியர் சங்கத்தினர் அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் கூறித்து அவர்கள் கூறியதாவது:
 அஞ்சல் துறையில் ஆர்.ஐ.சி.டி. திட்டத்தில் மின்னணு சாதனங்கள் வந்த பின்னர், கிராமிய அஞ்சலகங்களில் இணையவழி இணைப்புகள் (சிக்னல்) சரிவர கிடைக்காமல், ஊழியர்கள் அவதியுறுகின்றனர்.
 தமிழகத்தில் வோடோஃபோன், ஏர்டெல் போன்ற தனியார் நிறுவனங்களின் இணையவழி இணைப்பு இந்த மின்னணு சாதனத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த இணையங்களுக்கான சிக்னல் கிராமப்புறங்களில் கிடைப்பதில்லை. இதற்காக, சிக்னல் கிடைக்கும் இடங்களுக்கு மின்னணு சாதனத்தை கொண்டு சென்று பணியாற்ற வேண்டியுள்ளது.
 தலைமை தபால் நிலையங்களிலிருந்து வரும் பார்சல்களைப் பிரித்து, அதிலுள்ளவற்றை இந்த சாதனத்தின் வாயிலாக பதிவு செய்தும், பிறகு தபால் சேவைகள், சேமிப்புத் திட்டங்கள், காப்பீடு திட்ட தொகை பெறுதல், வழங்குகள், தபால் வரவு செலவு கணக்குகள் என அனைத்தையும், கையடக்க மின்னணு சாதனத்தில் பதிவிறக்கம் செய்து முடிவதற்குள் ஊழியர்கள் நாள் முழுவதும் அவதிப்படநேரிடுகிறது.
 அவசரமாக வரும் வாடிக்கையாளர்களின் கட்டணத்தை செலுத்தவோ, தபால் சேவைக்கான பதிவை மேற்கொள்ளவோ நீண்ட தாமதமாகிறது. இதனால், பணிகள் பாதிக்கின்றன. முதியோர் ஓய்வூதியம் தொகை வந்துள்ள நிலையில், அதன் பட்டியலை சாதனத்தில் எடுத்து பயன்படுத்த தாமதமாகிறது. இதனால், முதியோர் வேதனை தெரிவிக்கின்றனர்.
 சில நேரங்களில் கணக்கு முடிக்க ஓரிரு நாள்கள் ஆகின்றன. பெரும்பாலான கிளை அஞ்சலக அதிகாரிகள், பணிகளை பிற்பகலில் முடித்துக்கொண்டு, துணை தபால் நிலையத்துக்கு மின்னணு சாதனத்தை எடுத்துச்சென்று, அங்கு பணிபுரிகின்றனர். இதனால் பெரும் மன உளைச்சல் அடைகின்றனர். மாநிலம் முழுவதும் இப்பிரச்னை உள்ளது.
 காப்பீடு திட்டம், செல்வமகள் சேமிப்புத் திட்டம், சேமிப்பு, வைப்புகளுக்கு இலக்கு வழங்கப்பட்டு, ஏற்கெனவே நெருக்கடி அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த மின்னணு சாதனம் செயல்படாமல் இருப்பது கூடுதல் பணி நெருக்கடியை கொடுத்து வருகிறது. இதனால், இந்த சாதனத்தின் இணையவழி தொடர்பு திறன், சர்வர் திறனை மேம்படுத்த வேண்டும். இந்தப் பிரச்னைகள் தீரும் வரை பழைய முறையில் தபால் சேவையாற்ற அனுமதிக்க வேண்டும் என்றனர்.
 ஒரே சர்வர் இணைப்பால் தாமதம்: இதுகுறித்து புதுவை கோட்ட தபால் துறை தொழில் நுட்ப அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது: இரண்டு தனியார் நிறுவனங்கள் தான், இதற்கான சர்வர் இணைப்பை வழங்கி வருகின்றன. தபால் வங்கி சேவைகளுக்கு ஒரு நிறுவனமும், தபால் சேவைக்கு ஒரு நிறுவனமும் சர்வரை இணைத்து வழங்குகின்றன. நாடு முழுவதும் ஒரே சர்வர் மூலம் இந்த சாதனங்கள் இயங்குவதால், இணைப்பு கிடைப்பதில் தாமதம் உள்ளது.
 போதிய சர்வர் கெபாசிட்டி இல்லாததால், வேகம் இல்லை. 3 ஜி சேவை இணைப்புடன் இந்த சாதனம் உள்ளதால், சிக்னல் பிரச்னை பெரிதாக இருக்க வாய்ப்பில்லை. இச்சாதனத்தின் திறன் அவ்வளவுதான். ஒரே நேரத்தில் இயக்குவதால், சர்வர் இணைப்பு கிடைப்பதில் தாமதம் இருக்கலாம். இருப்பினும் சாதனங்கள் நல்ல முறையில் இயங்கி வருகின்றன.
 எனினும், இப்பிரச்னைகள் குறித்து, தபால் துறைத் தலைவர், முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, இணைய சேவையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
 -இல. அன்பரசு
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com