சீரமைப்புக்கு காத்திருக்கும் குற்றாலம்

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் சில தினங்களில் சீசன் தொடங்கவுள்ள நிலையில், அங்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என
சீரமைப்புக்கு காத்திருக்கும் குற்றாலம்

தென்காசி: திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் சில தினங்களில் சீசன் தொடங்கவுள்ள நிலையில், அங்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 தென்னகத்தின் ஸ்பா, ஏழைகளின் ஊட்டி, அருவிகளின் நகரம் என்றழைக்கப்படும் குற்றாலத்தில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களைகட்டும். இன்னும் சில தினங்களில் தென்மேற்குப் பருவமழை பெய்யத் தொடங்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
 குற்றாலத்தில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கான சீசனாகும். அதனைத் தொடர்ந்து, கார்த்திகை மாதம் முதல் தேதி முதல் மகரஜோதி வரையிலும் இரண்டாவது கட்ட சீசனாகும். இந்த இரண்டு சீசன் காலங்களிலும் சுமார் 1 கோடி பேர் குற்றாலத்திற்கு வருகின்றனர். எனவே சீசனை முன்னிட்டு தமிழக சுற்றுலாத் துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் சிறப்புநிலை பேரூராட்சி, குற்றாலநாதர் கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

 நிகழாண்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, எந்தவிதமான பணிகளும் இங்கு நடைபெறவில்லை. இன்னும் சில தினங்களில் குற்றாலத்தில் சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குற்றால அருவிகளில் தண்ணீர் விழத் தொடங்கிவிட்டால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரையிலும் தொடர்ந்து தண்ணீர் குறைந்த அளவிலாவது கொட்டும். அப்போது அருவி பகுதிகளில் எந்தவிதமான பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ள முடியாது. குற்றாலம் பேரருவி, ஐந்தருவி மற்றும் பழையகுற்றாலம் அருவிகளில் தண்ணீர் விழும் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் தவறி கீழே விழுந்துவிடாதவாறு பிடித்துகொண்டு குளிப்பதற்காக தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டிருக்கும். குற்றாலம் பேரருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியிலும், பழையகுற்றாலத்தில் ஆண்கள் குளிக்கும் பகுதியிலும் இந்தக் கம்பிகள் முழுவதுமாக அகற்றப்பட்ட நிலையில் உள்ளன. குற்றாலத்தில் அருவியின் முன்புறம் தடாகத்தில் யாரும் விழுந்திடாத வண்ணம் வைக்கப்பட்டுள்ள தடுப்புக் கம்பியில் உள்ள ஓட்டையின் வழியாக குழந்தைகள் தடாகத்தில் தவறிவிழும் அபாயம் உள்ளது. பழையகுற்றாலத்தில் அருவி பகுதியில் குழந்தைகள் குளித்து மகிழும் வகையில் சிறிய அளவிலான நீச்சல்குளம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை முறையாக பராமரிக்காததால் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. குற்றாலத்தில் சீசன் காலங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்படும்போது ஜெனரேட்டர் மூலமாக மின் இணைப்பு வழங்கப்படும். அந்த ஜெனரேட்டரை பாதுகாப்பான இடத்தில் வைப்பதுடன், இணைப்பு வயர்களை சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு பொருத்த வேண்டும்.
 


 கழிப்பிட வசதி: குற்றாலம் பேரருவியில் பெண்கள் உடை மாற்றும் அறை அமைந்துள்ள பகுதியில் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகளை சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்கு திறந்துவிட வேண்டும். சன்னதி பஜாரில் குற்றாலநாதர் கோயில் சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் கழிப்பறையிலுள்ள கோப்பைகள் முழுவதும் சேதமடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. கோயில் நிர்வாகம் சார்பில் அதனை உடனடியாக பராமரிக்க வேண்டும். தென்காசியிலிருந்து குற்றாலம் செல்லும் சாலையில் குற்றாலம் எல்லையில் ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு இதுவரை மக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்படாத சுகாதார வளாகத்தை திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

 பூங்காக்கள்: குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்து மகிழும் நேரங்கள் தவிர குழந்தைகளுடன் பொழுதுபோக்குவதற்கான அம்சங்களில் ஒன்று பூங்கா, மற்றொன்று படகுப் போக்குவரத்து. இதில் பூங்காக்களில் மட்டுமே குழந்தைகள் அங்குள்ள விளையாட்டு உபகரணங்களில் குதூகலமாக விளையாடுவார்கள். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் உணவருந்தி ஓய்வு எடுக்கும் பகுதியாகும். இங்கு பல்வேறு பூங்காக்கள்இருந்தாலும் பேருந்துநிலையம் பகுதியில் உள்ள விஸ்வநாதராவ் பூங்கா, பேரருவி பகுதியில் உள்ள பூங்கா ஆகிய இரண்டில் மட்டுமே தற்போது சுற்றுலாப் பயணிகள் பொழுதை கழிக்கின்றனர். சுற்றுசூழல் பூங்கா மற்றும் சிறுவர் பூங்கா இரண்டிலும் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுவதால் பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்வதில்லை. இலவசமாக பயன்படுத்தகூடிய பூங்காக்களில் மாடுகளும், நாய்களும் உள்ளே நுழைந்து சுற்றுலாப் பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன. விஸ்வநாதராவ் பூங்காவில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சான்றோர்கள், தமிழன்னை சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் கம்பர், திருவள்ளுவர், ஒளவையார், இளங்கோவடிகள் உள்ளிட்டோரின் சிலைகள் அமைந்துள்ளன. இந்த சிலைகளில் பெரும்பாலும் சேதமடைந்து காணப்படுகின்றன. பேரருவி பகுதியில் அமைந்துள்ள பூங்காவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் செடி கொடிகள் அடர்ந்து, இருக்கைகள் சேதமடைந்து, விளையாட்டு உபகரணங்களும் சேதமடைந்து காணப்படுகின்றன.

 தங்கும் விடுதிகள்: குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சிக்குச் சொந்தமாக ரோஜா, மல்லிகை, தென்காசி சாலை தங்கும் விடுதி, குற்றாலம் பேரருவி தங்கும் விடுதி, சத்திரம், அருவி இல்லம், பேருந்து நிலைய தங்கும் விடுதி என நூற்றுக்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. ஆனால் இவற்றில் பேரருவி தங்கும் விடுதி, ரோஜா தங்கும் விடுதியை தவிர வேறு எந்த விடுதியிலும் தங்க முடியாது. அதை மீறி தங்கினால் எப்போது வேண்டுமானாலும் அசம்பாவிதங்கள் நடக்கும் அபாயம் உண்டு. தங்கும் விடுதிகளின் மூலம் பேரூராட்சிக்கு கிடைக்கும் வருவாயை விட அதனை பராமரிக்கும் செலவுகளே அதிகமாகும். குறிப்பாக, தென்காசி சாலை தங்கும் விடுதி, அருவி இல்லங்கள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளன. பேரூராட்சிக்கு சொந்தமான தங்கும் விடுதிகளில் கட்டணம் குறைவாக இருக்கும் என்பதால் சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள அறைகளில் தங்குவதற்கு விரும்புகின்றனர். ஆனால் கட்டடத்தின் ஸ்திரத்தன்மையை பார்த்து, அதிக கட்டணம் கொடுத்து தனியார் விடுதிகளில் தங்குகின்றனர். ஐந்தருவியில் பெண்கள் உடை மாற்றும் அறையும் மிகவும் ஆபத்தான நிலையிலேயே உள்ளது. மேலும் ஐந்தருவி பேருந்து நிலையம் சாலை முழுவதும் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷிடம் கேட்ட போது அவர் கூறியதாவது: குற்றாலம் தங்கும் விடுதிகள் பராமரிப்பு, கலைவாணர் கலையரங்கம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அரசு நிதி ஒதுக்கீடு செய்தவுடன் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
 - பா.பிரகாஷ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com