பொவிழந்த பூண்டி ஏரி...நீர் ஆதாரத்தைப் பாதுகாக்க ரூ. 8 கோடியில் மராமத்துப் பணிகள்

பொலிவிழந்து காணப்பட்ட பூண்டி ஏரியின் நீர் ஆதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் 20 ஆண்டுகளுக்குப் பின் கசிவு நீர்க் கால்வாய், அரிப்பைத் தடுக்கும் வகையில் கற்சுவர் மற்றும் இருபுறமும் தடுப்புச் சுவர் அமைத்தல
பொவிழந்த பூண்டி ஏரி...நீர் ஆதாரத்தைப் பாதுகாக்க ரூ. 8 கோடியில் மராமத்துப் பணிகள்

பொலிவிழந்து காணப்பட்ட பூண்டி ஏரியின் நீர் ஆதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் 20 ஆண்டுகளுக்குப் பின் கசிவு நீர்க் கால்வாய், அரிப்பைத் தடுக்கும் வகையில் கற்சுவர் மற்றும் இருபுறமும் தடுப்புச் சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கு ரூ. 8 கோடி ஒதுக்கீடு செய்து, பணிகளைத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி ஏரி, சென்னை மாநகர மக்களின் தாகம் தணிக்கும் முக்கிய ஏரியாக விளங்கி வருகிறது. அத்துடன், இப்பகுதி மக்களின் முக்கிய சுற்றுலாத்தலமாகவும் இருந்து வருகிறது. அதனால் இந்த ஏரியைச் சுற்றிப் பார்க்க பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இங்கு நாள்தோறும் காலை முதல் மாலை வரை மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால், தற்போது இப்பூங்கா பொலிவிழந்து காணப்படுகிறது. அதற்குக் காரணம் இந்த ஏரி பல்வேறு முறை நிரம்பியுள்ளது. ஆனால், கடந்த 2015-இல் புயல் மற்றும் பெருமழையால் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடி, அதிக அளவில் சேதத்தை ஏற்படுத்தியது. அப்போது, நீர் வெளியேறிச் சென்ற கரையோரங்களில் மண் அரிப்பைத் தடுக்கும் வகையில், வைக்கப்பட்ட கருங்கற்கள் இடம்மாறியதுடன் சேதத்தையும் ஏற்படுத்தியது.
 அதேபோல், பூங்காவில் இருந்த ஏராளமான மரங்கள் சாய்ந்தன. அங்கு வருவோர் அமர்வதற்கான இருக்கைகள், பொழுதுபோக்கும் இடங்கள், சிலைகள் அழகிய நீருற்றுகள் ஆகியவையும் சேதமடைந்தன. அதன் பின் போதிய மழை பெய்யாததால், ஏரி நிரம்பவில்லை.
 எனவே, "மழை நீரை வரத்துக் கால்வாய்கள் வழியாகக் கொண்டு வந்து நீர் ஆதாரத்தைப் பெருக்க, மராமத்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கடந்த 20 ஆண்டுகளாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளாத காரணத்தால்தான் ஏரி பொலிவிழந்து காணப்படுகிறது' என்று இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பொலிவிழந்த பூங்காவை சீரமைத்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
 ரூ.10 கோடி ஒதுக்கீடு: இதை ஏற்று பூண்டி ஏரியில் பெய்யும் மழை நீர் வீணாகாமல் தேக்கும் வகையில், பொதுப்பணித் துறை அதிகாரிகள் திட்ட மதிப்பீட்டைத் தயாரித்து அனுப்பி வைக்குமாறு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதன்படி, மழைக்காலங்களில் பெய்யும் மழைநீரை முதலில் ஏரிக்குக் கொண்டு வர பூண்டி ஏரியில் உள்வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதை அகற்றுதல், அந்த கால்வாய்களைத் தூர்வாரி கரைகளை பலப்படுத்துல், ஏரியின் உள்பகுதியில் மணல் அரிப்பைத் தடுத்தல் ஆகிய பணிகளுக்கு அதிகாரிகள் திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைத்தனர். அதை அரசு பரிசீலித்து, பூண்டி ஏரியை பலப்படுத்தி மழைநீரை சேமிப்பதற்கான பணிகளை ரூ.10 கோடியில் மேற்கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 பல்வேறு வகையான பணிகள்: இது தொடர்பாக பொதுப்பணித்துறை(நீர்வள ஆதாரப்பிரிவு) பொறியாளர் ஒருவர் கூறியது:
 இந்த ஏரி 16 கி.மீ. சுற்றளவு கொண்டது. ஏரியின் நீர் ஆதாரத்தை பலப்படுத்த வேண்டும். இதற்காக ஏரியின் உள்பகுதியிலும், வெளிப்பகுதியிலும் மணல் அரிப்பைத் தடுக்கும் நோக்கில் கருங்கற்கள் பதிக்கப்பட உள்ளன. ஏரியின் இருபுறமும் உள்ள சாலையில் சுற்றுலாப் பயணிகள் சென்று பார்க்கும் வகையில் தடுப்பு கைப்பிடிச்சுவர் 2 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட உள்ளது.
 அதேபோல், இச்சாலையில் மழைக்காலங்களில் வழியும் நீர் மற்றும் ஏரியின் கசிவு நீர் ஆகியவற்றைக் கொண்டு செல்லும் வகையில் கருங்கல் கசிவு நீர்க் கால்வாய் மற்றும் குட்டைகள், பூங்காவில் நீருற்று அமைப்பு, பல்வேறு வகையான செடிகள் வளர்த்தல் மற்றும் பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் அமரும் வகையில் இருக்கைகள், விளையாட்டு உபகரணங்கள் அமைத்தல் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.
 பேபி கால்வாய் வழியாக நீர் திறக்கப்படும் ஷட்டர் கடந்த 40 ஆண்டுகளுக்குப் பின் தற்போதுதான் சீரமைக்கப்படுகிறது. அதேபோல், பூண்டி ஏரி நீர் உள்வரத்துக்காக 8 கால்வாய்கள் உள்ளன. இதில் பெரிய அளவிலான கால்வாய் முழுவதும் ஆக்கிரமிப்பில் இருந்தது. அதை அகற்றி 16 ஆண்டுகளுக்கு பின் கால்வாய் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

 50 ஏக்கர் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை
 திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை சாலையில் பூண்டி ஏரியையொட்டி 50 ஏக்கர் பரப்பளவு நிலம் உள்ளது. இதில் 10 ஏக்கர் பரப்பளவில் பனை மரம், மா மரங்கள் அடங்கிய தோப்பு உள்ளது. மீதமுள்ள பகுதியில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்து பயிர் செய்வதோடு, வீட்டு மனைகளாகவும் மாற்றியுள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
 அதன்படி, ஆக்கிரமிப்புகளை அகற்றி தடுப்புச்சுவர் அமைத்து பல்வேறு பணிகளை மேற்கொள்ள பொதுப் பணித் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் மூலம் வருங்காலத்தில் பூண்டி ஏரியில் நீர் ஆதாரத்தைக் கொண்டு மரக்கன்றுகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com