உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50%  இடங்களுக்கு மேல் வாய்ப்பு :வார்டுகள் வாரியாக ஒதுக்கீடு

உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில், பெண்களுக்குக் கூடுதலாக வாய்ப்புகள் கிடைக்க உள்ளன. சென்னையில்


உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில், பெண்களுக்குக் கூடுதலாக வாய்ப்புகள் கிடைக்க உள்ளன. சென்னையில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் 105 வார்டுகள் வரை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று, இதர மாநகராட்சிகள், 122 நகராட்சிகளிலும் சரிபாதி அளவிலான வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜூலை மாதத்துக்குள் வாக்காளர் பட்டியலைத் தயார் செய்து ஆகஸ்ட்டில் தேர்தலுக்கான அறிவிக்கையை வெளியிட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. 
 தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் ஒருபுறம் மேற்கொண்டிருக்க, உள்ளாட்சி அமைப்புகளுக்கு பொறுப்பான நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை ஆகியனவும் தங்களது தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளன. அதன்படி, அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், கிராம ஊராட்சிகளில் 50 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகுதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலை சம்பந்தப்பட்ட துறைகள் அரசு உத்தரவுகளாக வெளியிட்டு அது அரசிதழில் வெளியாகியுள்ளது.
அதன்படி, பொது, பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள் (பொது), தாழ்த்தப்பட்டவர்கள் (பெண்கள்), பழங்குடியினர் (பொது), பழங்குடியினர் (பெண்கள்) என்ற வகைகளில் வார்டுகள் பிரிக்கப்படுகின்றன.
இந்த அடிப்படையிலேயே அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் 105 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதாவது, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் பெண்கள் வார்டுகளையும் சேர்த்து பெண்களுக்கான வார்டுகள் அதிகரித்துள்ளன. இதனால், சென்னை மாநகராட்சியில் ஆண்களை விட பெண்களே அதிகளவு இருப்பர்.
அறிவிக்கை வெளியீடு: தமிழகத்தில் மொத்தமுள்ள 122 நகராட்சிகளிலும் பெண்களுக்கு சரிபாதி அளவுக்கு வார்டுகள் அளிக்கப்பட்டுள்ளன.
ஆனாலும், அவர்கள் பொதுவான வார்டுகளிலும் போட்டியிடத் தடையில்லை என்பதால் நகராட்சிகள், கிராம ஊராட்சிப் பகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருக்கும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
 மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட வார்டுகள் குறித்த விவரங்கள் அறிவிக்கைகளாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த விவரங்களை சம்பந்தப்பட்ட மாநகராட்சிகளின் இணையதளங்கள், அலுவலகங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம். அறிவிக்கைகளை அறிவிப்புப் பலகைகளில் ஒட்டவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக உள்ளாட்சித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com