மாற்று மதங்கள் குறித்த புரிதல் அவசியம்: ஈகைப் பெருநாள் மலரை வெளியிட்டு காரைக்கால் ஆட்சியர் பேச்சு

மாற்று மதங்கள் குறித்த புரிதல் அனைவருக்கும் அவசியம். அப்போதுதான் ஒற்றுமை உறுதிப்படும் என்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா கூறினார்.
மாற்று மதங்கள் குறித்த புரிதல் அவசியம்: ஈகைப் பெருநாள் மலரை வெளியிட்டு காரைக்கால் ஆட்சியர் பேச்சு

மாற்று மதங்கள் குறித்த புரிதல் அனைவருக்கும் அவசியம். அப்போதுதான் ஒற்றுமை உறுதிப்படும் என்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா கூறினார்.
நாகூர் முஸ்லிம் சங்க ஹமீதியா மஹாலில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற விழாவில்,  தினமணி ஈகைப் பெருநாள்  மலரை வெளியிட்டு அவர் பேசியது : 
எல்லா மதத்துக்கும் அடிப்படை அன்பும், உண்மையும் தான்.  அனைத்து மதங்களும் ஒற்றுமையையே வலியுறுத்துகின்றன.  ஒவ்வொரு மதமும் என்ன சொல்கிறது, வழிபாட்டு முறைகள் எதை வலியுறுத்துகிறது என்பது குறித்து  நல்ல புரிதல் ஏற்படுவது அவசியமாகும். மத ஒற்றுமை, நாட்டின் வளர்ச்சி குறித்து பலருக்கு பல ஐயப்பாடுகள் உள்ளன.  அதை காரைக்கால், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் சிறிது காலம் வசித்தால் தெரிந்துகொள்ள முடியும்.  
சுதந்திரத்துக்கு முன்பு இந்தியா எப்படி இருக்க வேண்டும் என கனவு கண்டோமோ அதன் முன் மாதிரியாக நாகை, காரைக்கால் மாவட்டங்கள் திகழ்கின்றன. வேற்றுமையில் ஒற்றுமையை இங்கு காணலாம். குறிப்பாக, மும்மதங்களின் முக்கிய வழிபாட்டுத் தலங்கள் இம்மாவட்டங்களில்தான் உள்ளன. குறிப்பாக, திருநள்ளாறு கோயிலுக்கு வருவோர் நாகூர், வேளாங்கண்ணி வழிபாட்டுத் தலங்களுக்கும் செல்கின்றனர். மத நல்லிணக்கத்தின் குட்டி இந்தியாவாக இதைப் பார்க்க முடியும்.
காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடக்கும்போது, பக்தர்களுக்கு நீர்மோர் பந்தலை இஸ்லாமியர்களும் அமைத்துத் தருகிறார்கள்.  கந்தூரி விழா என்கிறபோது அனைத்து மதத்தினரும் பங்கேற்கிறார்கள். சுதந்திர இந்தியாவின் கனவான ஒற்றுமை என்பது நாடு முழுவதும் மட்டுமல்ல, உலகம்  முழுவதும் பரவவேண்டும். அது இங்கிருந்து புறப்பட வேண்டும் என்றார் ஆட்சியர். 
மலரின் முதல் பிரதியை நாகை மாவட்ட காவல் உதவிக் கண்காணிப்பாளர் வி. பத்ரிநாராயணன் பெற்றுக் கொண்டார்.  
திரைப்படப் பாடலாசிரியர் யுகபாரதியின் வாழ்த்துரை: 
நாகூரில் ஈகைப் பெருநாள் மலரை வெளியிடுவது மிகவும் பொருத்தமானது. இதற்கு ரம்ஜான் மலர் என்று பெயரிட்டிருக்கலாம். ஆனால், ஈகைப் பெருநாள் மலர் என்று அழகான தமிழ்ப் பெயரை சூட்டியுள்ளனர். இந்த மலரானது, இஸ்லாம் குறித்து பிற மதத்தினருக்குத் தெரிவிப்பதை மட்டும் செய்யவில்லை. மாறாக, பிற மதத்தினர், இஸ்லாத்தை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதையும், இந்த மலர் எடுத்துக் கூறுகிறது. ஏனெனில், பிற மதங்களைச் சேர்ந்த ஏராளமானவர்கள் இதில் கட்டுரைகளை எழுதியுள்ளனர்.
சுதந்திரப் போராட்டக் காலத்தில், பாரதி மட்டும்தான் புதுச்சேரி வீதியில் உள்ள முஸ்லிம் கடைக்குச் சென்று தேநீர் அருந்தினார். 
அன்றைக்கு இருந்த சனாதன சிந்தனைகளை உடைத்தெறிந்து தனது மனைவியை அழைத்துக்கொண்டு முஸ்ஸிம் கடைக்குச் சென்று தேநீர் அருந்தியவன் பாரதி என்பன போன்ற பல  தகவல்களை தினமணி ஈகைப் பெருநாள் மலரில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. மகாத்மா காந்தியே புகழ்ந்த இஸ்லாத்தை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றார்.
வாழ்த்துரையாற்றிய சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் எம்.ஜி.கே. நிஜாமுதீன், தினமணியின் ஈகைப் பெருநாள் மலரை இனிவரும் காலங்களிலும் நாகூரிலேயே வெளியிட வேண்டும் என்றார்.
தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் தலைமை வகித்து, விழாவைத் தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் சிவசக்தி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் சிவசக்தி ஆர்.கே. ரவி, ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநர் பி.ஆர். ரவி, பேராசிரியர் முரளி அரூபன், நாகூர் முஸ்லிம் சங்கத் தலைவர் வி. சாதிக், நாகூர் வணிகர் சங்கத் தலைவர் கே. சரவணப்பெருமாள், நாகூர் வணிகர் சங்க முன்னாள் தலைவர் கே. பிலிப்ராஜ் ஆகியோர் மலரின் பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர்.
பேராசிரியர் ஜெ. ஹாஜாகனி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நாகை பதிப்பு வர்த்தக மேலாளர் எல். வெங்கடேஸ்வரன் நன்றி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com